/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தி.மு.க., வனவாசம் செல்லும்: ஜெயகுமார் ஆரூடம்
/
தி.மு.க., வனவாசம் செல்லும்: ஜெயகுமார் ஆரூடம்
ADDED : ஜூலை 14, 2025 11:36 PM

திருத்தணி, ''வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கோட்டை பக்கம் தலைகாட்ட முடியாது; வனவாசம் செல்ல வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.
திருத்தணி மாவட்ட அரசு மருத்துவமனையை முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். புதிய பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்.
கூட்டுக்குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில், திருத்தணி கமலா தியேட்டர் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., அமைப்பு செயலரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலருமான திருத்தணி கோ.அரி வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான ரமணா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஏற்கனவே நடந்த, 24 'லாக் அப் டெத்'துக்கும், 'சாரி' என்று சொன்னால் போதுமா? நிவாரணம் வழங்க வேண்டும். 'குடி'மகன்களை அதிகரித்து டாஸ்மாக் மூலம், ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் பெறப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள், கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலின் அரசுக்கு மக்கள், அரசு ஊழியர்கள் சரியான பாடம் புகட்டுவர்.
வரும் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., வனவாசம் போக வேண்டியது தான்; கோட்டை பக்கமே தலைகாட்ட முடியாது.
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மருத்துவர், செவிலியர்கள் நியமிக்கவில்லை. ஆனால், மருத்துவ துறை அமைச்சர், மாரத்தான் ஓடிக் கொண்டிருக்கிறார். தற்போது, ஓட்டத்துறை அமைச்சராக மாறிவிட்டார்.
இவ்வாறு பேசினார்.