/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு முகத்துவாரத்தில் துார்வாரும் பணி...தீவிரம்!:வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராவதால் நிம்மதி
/
பழவேற்காடு முகத்துவாரத்தில் துார்வாரும் பணி...தீவிரம்!:வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராவதால் நிம்மதி
பழவேற்காடு முகத்துவாரத்தில் துார்வாரும் பணி...தீவிரம்!:வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராவதால் நிம்மதி
பழவேற்காடு முகத்துவாரத்தில் துார்வாரும் பணி...தீவிரம்!:வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராவதால் நிம்மதி
ADDED : நவ 25, 2024 02:44 AM

பழவேற்காடு:பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் பகுதியான முகத்துவாரத்தில், 26.85 கோடி ரூபாயில் இருபுறமும் பாறைகள் பதித்து, மணல் குவிவதை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பது, துார்வாருவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீரை கடலுக்குள் கொண்டு செல்ல தயாராகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலும் ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதி வழியாக, 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். முகத்துவாரமானது மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்வதற்கான நுழைவு வாயிலாக உள்ளது.
ஆரணி ஆறு, பக்கிம்காம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளின் உபரிநீர் பழவேற்காடு ஏரியில் கலந்து, பின் முகத்துவாரம் வழியாக கடலுக்குள் செல்கிறது.
இது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தை உள்வாங்கி கடலுக்கு அனுப்புவதால், பாதிப்பு குறைகிறது.
இருப்பினும் கடல் அலைகளால் முகத்துவாரம் பகுதியில் அவ்வப்போது மணல் திட்டுக்கள் உருவாகி மீனவர்கள் கடலுக்கு செல்வதில் சிரமத்தை உண்டாக்குகிறது. அதேபோன்று மழைக்காலங்களில் வெள்ள நீர் வடிவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
அச்சமயத்தில் மீனவர்கள் தற்காலிக முகத்துவாரத்தை ஏற்படுத்தி பழவேற்காடு ஏரியில் சூழும் வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவர்.
மீனவர்களின் பல ஆண்டு கோரிக்கையின் பயனாக, தற்போது அங்கு, நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 26.85 கோடி ரூபாயில் நிரந்தர முகத்துாரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம், அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இயந்திரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு செல்லவதற்காக லைட்அவுஸ் குப்பத்தில் இருந்து, முகத்துவாரம் வரை, 5 கி.மீ., தொலைவிற்கு கடற்கரையை ஒட்டி செம்மண் மற்றும் சரளைகற்கள் கொட்டி, புதிய பாதை உருவாக்கப்பட்டது.
பின், லாரிகளில் பெரிய பெரிய பாறைகற்கள் கொண்டு செல்லப்பட்டு, அவற்றை நேர்த்தியாக அடுக்கி அலைதடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிகின்றன.
இந்த அலை தடுப்பு சுவரானது, கடல் மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில், 160 மீ. நீளம், தெற்கு பகுதியில் 150மீ. நீளம் மற்றும், 4.5மீ. உயரத்தில் அமைக்கப்படுகிறது.
மேலும், அலை தடுப்பு சுவர்களின் நீளத்திற்கு, 200 -- 280மீ. அகலம், 3மீ. ஆழத்தில் மணல் திட்டுக்கள் வெளியேற்றும் பணியும் நடைபெறுகிறது.
இருபுறமும் பாறைகள் பதிக்கப்பட்டு, மத்தியில் உள்ள மணல் திட்டுக்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அள்ளி, லாரிகளில் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது.
மேலும், பொக்லைன் இயந்திரம் செல்ல முடியாத, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகில் பொருத்தப்பட்ட சிறிய வகை பிரத்யோக 'டிரஜ்ஜர்' இயந்திரங்களை கொண்டு மணல் திட்டுக்கள் வெளியேற்றப்படுகிறது.
நிரந்தர முகத்துவாரம் அமைவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் ஆற்றுநீர் எளிதாக கடலுக்கு சென்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்குவதை தவிர்க்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
நிரந்தர முகத்துவாரம் என்பது எங்களது நீண்டநாள் கனவாகும். அது விரைவில் நிறைவேற உள்ளது நிம்மதியை தருகிறது. முகத்துவாரத்தில் மணல் திட்டுக்கள் சேர்ந்து அடைந்து போவது மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்துவதுடன், பொன்னேரி, பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் சூழும் மழைநீர் வெளியேற முடியாத நிலையும் ஏற்படுகிறது. முகத்துவார பகுதியில் டிரஜ்ஜர் இயந்திரங்களை நிரந்தமாக பொருத்தி அவ்வப்போது குவியும் மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது முகத்துவாரத்தில் பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில், பழவேற்காடு ஏரிக்கு வரும் மழைநீர் உள்வாங்கி கடலுக்குள் கொண்டு செல்லும் என்பதால், பாதிப்புகளை தவிர்க்கலாம். மீனவர்களும் கடலுக்கு சென்று வருவதில் சிரமங்கள் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.