/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆறு, ஏரி, கால்வாயில் கழிவுநீரை விடும் ஓட்டுநர்கள்...அட்டூழியம்: நகராட்சி அபராதம் விதித்தும் விதிமீறல் அதிகரிப்பு
/
ஆறு, ஏரி, கால்வாயில் கழிவுநீரை விடும் ஓட்டுநர்கள்...அட்டூழியம்: நகராட்சி அபராதம் விதித்தும் விதிமீறல் அதிகரிப்பு
ஆறு, ஏரி, கால்வாயில் கழிவுநீரை விடும் ஓட்டுநர்கள்...அட்டூழியம்: நகராட்சி அபராதம் விதித்தும் விதிமீறல் அதிகரிப்பு
ஆறு, ஏரி, கால்வாயில் கழிவுநீரை விடும் ஓட்டுநர்கள்...அட்டூழியம்: நகராட்சி அபராதம் விதித்தும் விதிமீறல் அதிகரிப்பு
ADDED : அக் 25, 2025 09:25 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கழிவுநீரை அகற்றும் லாரிகள், 'ஆறு, ஏரி, மழைநீர் கால்வாய் போன்ற நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்ற கூடாது' என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இருப்பினும், லாரி ஓட்டுநர்கள், கழிவுநீரை மழைநீர் கால்வாயில் திறந்து விடுகின்றனர். நகராட்சி பலமுறை அபராதம் விதித்தும், லாரி ஓட்டுநர்கள் மீண்டும், மீண்டும் விதிமீறி நீர்நிலைகளில் கழிவுநீரை கலந்து விடுவதால், தண்ணீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில், 18,500க்கும் மேற்பட்ட கட்டடங்கள், 2,000க்கும் மேற்பட்ட கடைகள், 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபம், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
நகராட்சியில், 80,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் கழிவுநீரை வெளியேற்ற, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பெரிய ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகளில் இருந்து தினமும் அதிகளவில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதில், ஒரு சில ஹோட்டல் மற்றும் திருமண மண்டபம் மற்றும் தொழிற்சாலைகளில், கழிப்பறை கழிவுகளை மட்டும், பாதாள சாக்கடையில் வெளியேற்றுகின்றனர்.
ஒரு சில வணிக நிறுவனங்கள் மற்றும் பெரும்பாலான வீடுகள், இன்னும் பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல் உள்ளன.
இதனால், தங்கள் கட்டடங்களில் சேகரமாகும் கழிவுநீரை, தனியார் கழிவுநீர் அகற்றும் லாரிகள் வாயிலாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றி வருகின்றனர்.இவ்வாறு வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை, லாரி ஓட்டுநர்கள், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கால்வாய்கள், கூவம் ஆறு போன்ற நீர் நிலைகளில் வெளியேற்றி வருகின்றனர்.
ஏற்கனவே, திருவள்ளூர் கலெக்டர், கழிவுநீர் அகற்றுவதற்கான விதித்த அறிவிப்பில், 'கழிவுநீரை அகற்றும் லாரிகளின் உரிமையாளர்கள், அவற்றை உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்ய வேண்டும்.
நகராட்சி பகுதியில் 5,000 மற்றும் ஊரக பகுதியில் 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிய வேண்டும். எடுக்கப்படும் கழிவுநீரை, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் மட்டுமே அகற்ற வேண்டும். நீர்நிலைகளில் வெளியேற்றினால் லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும்' என, எச்சரித்து இருந்தார்.
ஆனால், இந்த எச்சரிக்கையை, கழிவுநீர் லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் பட்டப்பகலில், திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில், கழிவுநீர் லாரியில் இருந்து, குழாய் வழியாக மழைநீர் சேகரிப்பு கால்வாயில் கழிவுநீர் விடப்பட்டது.
கடந்த மாதம், சாலையோரம் அமைத்திருந்த மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை, அரசு மருத்துவமனை அருகே என, பல இடங்களில் மழைநீர் குளமாக தேங்கியது.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் பல லட்சம் ரூபாய் செலவழித்து, மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைத்தனர். இந்நிலையில், கழிவுநீரை மழைநீர் கால்வாயில் வெளியேற்றுவதால், கால்வாய் மேலும் துார்ந்து விடும் அபாயம் உள்ளது.
மழைநீர் கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர், காக்களூர் ஏரிக்கு செல்கிறது. கழிவுநீர் கலப்பதால், ஏரியில் உள்ள தண்ணீரும் மாசடையும். நிலத்தடி நீரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

