/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதம் முதியவர் இறப்பு: உறவினர்கள் அதிர்ச்சி
/
அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதம் முதியவர் இறப்பு: உறவினர்கள் அதிர்ச்சி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதம் முதியவர் இறப்பு: உறவினர்கள் அதிர்ச்சி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதம் முதியவர் இறப்பு: உறவினர்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 13, 2025 02:45 AM
திருத்தணி: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு மருத்துவர்கள் காலதாமதமாக சிகிச்சை அளித்தால் இறந்து விட்டதாக, உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருத்தணி நகராட்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் முனிரத்தினம், 70. இவருக்கு நேற்று காலை 9:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் அவரது மகன் கோபி மற்றும் உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த தனியார் நர்சிங் கல்லுாரி பயிற்சி செவிலியர்கள், முனிரத்தினத்திற்கு இ.சி.ஜி., எடுக்க முயன்றனர்.
அவர்கள் சரியான முறையில் இ.சி.ஜி., எடுக்காததால், ஒரு மணி நேரம் கழித்து அரசு மருத்துவமனையின் செவிலியர்கள் இ.சி.ஜி., எடுத்து, அங்குள்ள மருத்துவரிடம் காண்பித்தனர்.
மருத்துவர் அவருக்கு ஆக்சிஜன் செலுத்த முயன்ற போது, மூச்சு திணறல் அதிகரித்தாக கூறப்படுகிறது.
தொடர்ந்து முனிரத்தினத்திற்கு சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி மதியம் இறந்தார்.
இதையடுத்து முனிரத்தினம் உறவினர்கள், மருத்துவர்கள் காலதாமதமாக, சிகிச்சை அளித்ததால் முனிரத்தினம் இறந்தார் என, வாக்குவாதம் செய்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து திருத்தணி போலீசார் மற்றும் அரசு மருத்துவமனையின் அலுவலர்கள் சமரசம் செய்து, முனிரத்தினத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து முனிரத்தினம் மகன் கோபி கூறியதாவது:
என் தந்தைக்கு, அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் உடனே சிகிச்சை அளிக்காததால், இறந்துவிட்டார். உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களே இப்படி நடந்துக் கொண்டால், எப்படி மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவர்.
கலெக்டர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.