/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் 16 மாதங்களாக முதியோர் தவிப்பு
/
உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் 16 மாதங்களாக முதியோர் தவிப்பு
உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் 16 மாதங்களாக முதியோர் தவிப்பு
உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் 16 மாதங்களாக முதியோர் தவிப்பு
ADDED : மார் 31, 2025 02:54 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி என, மொத்தம் ஒன்பது தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் அலுவலகம் வாயிலாக, 60 வயது பூர்த்தியடைந்த முதியோருக்கு உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகள், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தால், விண்ணப்பங்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முடிவில் தனி தாசில்தார் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்குவார்.
கடந்த 2023 நவம்பர் மாதம் முதல், கடந்த பிப்ரவரி மாதம் வரை, மாவட்டம் முழுதும் ஒன்பது தாலுகாக்களில், 8,000 பேர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், 6,500 பேரின் விண்ணப்பங்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்தும், தனி தாசில்தார்கள் வாயிலாக உதவித்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என தேர்வு செய்யப்பட்டும் ஆணை பிறப்பித்துள்ளனர்.
இருப்பினும், பயனாளிகள் 16 மாதங்களாக உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுதவிர தினமும் நுாற்றுக்கணக்கான பயனாளிகள், அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று உதவித்தொகை எப்போது எங்களுக்கு கிடைக்கும் என, அங்குள்ள தாசில்தார் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
இவ்வாறு, பல மாதங்களாக பயனாளிகள் உதவித்தொகைக்காக, தாசில்தார் அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், வருவாய் துறை அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:
அரசின் உதவி தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது, முதியோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து, தகுதியில்லாமல் உதவித்தொகை பெறுவோரின் அடையாளம் கண்டு, அவர்களை நீக்கிவிட்டு, காத்திருக்கும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
மேலும், உதவித்தொகை வழங்க தேவையான தொகையை வழங்குமாறு, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில், தகுதி வாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் கட்டாயம் உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.