/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
/
அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
ADDED : அக் 03, 2024 02:37 AM

திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், நேற்று காந்தி ஜெயந்தி ஒட்டி கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்தது.
திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் தலைவர் நரசிம்மராஜு தலைமை வகித்தார். இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரபு சங்கர், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ். சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் நாசர் பேசியதாவது:
தமிழகத்தில் மட்டும் தான் ஆண்டுக்கு, ஆறு முறை கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 131 கோடி ரூபாய் மதிப்பில், 225 சாலை பணிகள் போடப்பட்டுள்ளன.
மேலும் 2024- - 25ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 20 கோடி ரூபாய் மதிப்பில், 42 சாலை பணிகள் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி ஒன்றியத்தில் மட்டும் நான்கு சாலை பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாவட்ட திட்ட இயக்குனர்கள் ஜெயகுமார், செல்வராணி, உதவி கலெக்டர் - பயிற்சி - ஆயுஷ் குப்தா, திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மீஞ்சூர்
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 55 ஊராட்சிகள், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 39 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
அத்திப்பட்டு ஊராட்சியில், தலைவர் சுகந்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், 'ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லை. அவசர சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகிறோம்.
'அவசர சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை வேண்டும்' என்றனர்.
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், ஒன்றிய சேர்மன் ரவி ஆகியோர் பங்கேற்றனர். இதில், பொன்னேரி நகராட்சியுடன் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியறுத்தப்பட்டது.
கடம்பத்தூர்
கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில், துணை தலைவர் வசந்தா முன்னிலையில் தலைவர் எம்.கே.ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வயலுாரில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' முகாமில், கலைஞர் வீடு கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் நிராகரிப்பட்டது என, அலைபேசியில் வந்த குறுந்தகவலை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த ஊராட்சி தலைவர் எம்.கே.ரமேஷ், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரித்து கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஊத்துக்கோட்டை
பூண்டி ஒன்றியம், பெரிஞ்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் ஆட்குறைப்பு நடந்ததை ஒட்டி, பெண்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.
அப்போது சமாதானப்படுத்திய ஊராட்சி தலைவர் வனிதா, அதிகாரிகளிடம் பேசி கூடுதல் ஆட்களை பணியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருவாலங்காடு
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 42 ஊராட்சிகளில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், திருவாலங்காடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஒன்றிய சேர்மன் ஜீவா விசயராகவன் பங்கேற்றார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 61 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தன. புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் தலைவர் அஸ்வினி தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் உள்ள இணைப்பு சாலையில், மழைநீர் வடிகால்வாய் இல்லாதததால், சாலையில் மநைீர் தேங்குகிறது.
உடனடியாக கால்வாய் அமைக்க வேண்டும். புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள தொழிற்சாலைகளால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டியில், நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக, பகுதிவாசிகள், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
சின்னநாகபூண்டி ஊராட்சியில், கடந்த கிராம சபை கூட்டங்களில் நடந்த தீர்மானங்களை நிறைவேற்றவில்லை. காலை 11:00 மணி வரை கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் பார்த்திபன் மற்றும் துணை தலைவர் மட்டுமே காத்திருந்தனர்.
இதையடுத்து, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பகுதிவாசிகளை சமரசம் செய்தார். அதை தொடர்ந்து கிராமசபை கூட்டம் நடந்தது.
- நமது நிருபர்கள் குழு -