/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் 29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா பணி விறுவிறு
/
பூண்டியில் 29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா பணி விறுவிறு
பூண்டியில் 29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா பணி விறுவிறு
பூண்டியில் 29 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா பணி விறுவிறு
ADDED : பிப் 20, 2025 01:29 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே, பூண்டி நீர்த்தேக்க கரையை ஒட்டி, 29 ஏக்கரில், 5 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் மே முதல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகர மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டம், பூண்டியில், 1944ம் ஆண்டு சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, அந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, ஆற்றின் கரையை ஒட்டியிருந்த, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள், அகற்றப்பட்டன.
அந்த நீர்த்தேக்கம், பூண்டி, சென்றாயன்பாளையம், மேட்டுப்பாளையம், பாண்டூர், பட்டரைபெரும்புதுார் என, 121 ச.கி.மீட்டர் துாரம் பரந்து, விரிந்து காணப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்த்தேக்கம் நடுவில், உபரி நீர் வெளியேற, 16 மதகுகள் உள்ளன.
பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், நீர்த்தேக்கம் நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரு கால்வாய் வாயிலாக, சோழவரம், புழல் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பூண்டி நீர்த்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணி துறை - நீர்வள ஆதாரம் அலுவலகம், அருகிலேயே உள்ளது.
பூண்டி மற்றும் சதுரங்கபேட்டை கிராமம் அருகில் நீர்த்தேக்க கரையோரத்திலும், அழகிய பூங்கா அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பூங்காக்கள் சிதிலமடைந்து விட்டது.
இந்த நிலையில், பூண்டி ஏரிக்கரையை ஒட்டி இருக்கும், சதுரங்கப்பேட்டையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தில் ஏராளமான மா, புளிய மரம், பனை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து அடர்த்தியாக இருந்தன. இந்த இடத்தில், 29 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, தனியார் தொண்டு நிறுவனத்திற்கு, அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பூங்கா அமைக்க, மாவட்ட நிர்வாகம் வாயிலாக, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2023, அக்., மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கின.
அங்கு, சுற்றுலா வருவோருக்கான உணவகம், குழந்தைகள் விளையாடும் பகுதி, சைக்கிள் நடைபாதை உள்ளிட்ட வசதி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், நடைபயிற்சி தளமும் அமைக்கப்பட்டு வருகிறது.
பிரதான கட்டடத்தின் மேல் தளத்தில், பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மாடத்தில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் முழுதும் தெரியும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாடத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோர் செல்வதற்காக, சாய்வு நடைதளமும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பூண்டி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தில், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில், தற்போது நிர்வாக கட்டடம், உணவகம் மற்றும் வரவேற்பரை கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.
சாலை, நடைபாதை, ஆழ்துளை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் அனைத்தும் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இருக்கை வசதி, அலங்காரம் உள்ளிட்ட மீதமுள்ள பணிகள் விரைவில் நடைபெறும். இப்பணிகள் வரும் மே மாதத்திற்குள் நிறைவடையும் வகையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

