/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு
/
குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு
ADDED : ஜன 12, 2025 02:30 AM

திருவள்ளூர்,
தலக்காஞ்சேரியில் குவிந்துள்ள குப்பையை அவ்வப்போது தீ வைத்து கொளுத்துவதால் ஏற்படும் புகையால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.
திருவள்ளூர் நகராட்சியில், தினமும், மட்கும், மட்காத குப்பை என, 35 டன் குப்பை சேருகிறது. இதை நகராட்சி மற்றும் தனியார் துப்புரவு ஊழியர்கள் வீடுதோறும் சென்று பெற்று வருகின்றனர்.
இந்த குப்பை அனைத்தும், ஈக்காடு அருகே உள்ள தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்படுகிறது. நகரில் அதிகரித்து வரும் குப்பையை கொட்ட இங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், நகரில் சேகரமாகும் குப்பையை தனியார் துப்புரவு ஊழியர்கள் தலக்காஞ்சேரியில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். அவ்வப்போது, அந்த குப்பையை தீவைத்து கொளுத்துவதால், அப்பகுதி முழுதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால், கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், அந்த பகுதியில் இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவ - மாணவியருக்கு மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் தலக்காஞ்சேரியில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை 'பயோமைனிங்' முறையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன், அழிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

