/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னம்மாபேட்டையில் தடுப்பணை சேதம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அவதி
/
சின்னம்மாபேட்டையில் தடுப்பணை சேதம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அவதி
சின்னம்மாபேட்டையில் தடுப்பணை சேதம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அவதி
சின்னம்மாபேட்டையில் தடுப்பணை சேதம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அவதி
ADDED : அக் 25, 2025 07:57 PM
திருவாலங்காடு: சின்னம்மாபேட்டை ஓடைக்கால்வாயில் தடுப்பணை சேதமடைந்துள்ளதால், நீர் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் ஓடைக்கால்வாய் உள்ளது. இந்த ஓடைக்கால்வாய் வழியாக பழையனுார், கூடல்வாடி, சின்னம்மாபேட்டை ஏரிகளுக்கு மழைநீர் செல்லும்.
சின்னம்மாபேட்டை மேம்பாலம் அருகே உள்ள இக்கால்வாயின் குறுக்கே, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், 20 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது.
மழைக்காலங்களில் தடுப்பணையில் தேங்கும் மழைநீர், விவசாயத்திற்கும் பயன்படுவதுடன், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.
மேற்கண்ட தடுப்பணை தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இருந்தது.
தற்போது பெய்த மழையால் தடுப்பணை சேதமடைந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தடுப்பணை இருக்கும்போது கால்வாயில் மழைநீர் தேங்கியிருக்கும். இது, கோடைக்கால பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
மேலும், கோடையில் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. தற்போது, தடுப்பணை சேதமடைந்து உள்ளதால், தண்ணீர் சேமிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த தடுப்பணையை முழுமையாக அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

