/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர் காப்பீடு தொகை கிடைக்கவில்லை மெதுாரில் விவசாயிகள் போராட்டம்
/
பயிர் காப்பீடு தொகை கிடைக்கவில்லை மெதுாரில் விவசாயிகள் போராட்டம்
பயிர் காப்பீடு தொகை கிடைக்கவில்லை மெதுாரில் விவசாயிகள் போராட்டம்
பயிர் காப்பீடு தொகை கிடைக்கவில்லை மெதுாரில் விவசாயிகள் போராட்டம்
ADDED : செப் 21, 2024 02:21 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார், வேம்பேடு, திருப்பாலைவனம், கோளூர், பனப்பாக்கம், இலுப்பாக்கம், ஆவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஆண்டு புயல் மழையின் நெற்பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின.
நீண்டநாட்கள் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடந்ததால், அவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்ததால், வேளாண்மை, வருவாய் மற்றும் புள்ளியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இதனால் பயிர் காப்பீடு செய்திருந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்கவில்லை எனக்கூறி நேற்று பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள மெதுாரில் விவசாயிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பயிர் காப்பீடு செய்து வரும் நிலையில், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில்லை. காப்பீடு நிறுவனங்கள் பல்வேறு குளருபடி செய்து, இழப்பீடு வழங்குவதை தவிர்க்கின்றன. மழையால் நெற்பயிர்கள் பாதித்து வருவாய் இழப்பிற்கு ஆளான அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், பொன்னேரி போலீசார் பேச்சு நடத்தினர். வேளாண்மைத்துறையினரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் போராட்டத்தால், பொன்னேரி -பழவேற்காடு சாலையில், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.