/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிரான்ஸ்பார்மர் திருட்டு அச்சத்தில் விவசாயிகள்
/
டிரான்ஸ்பார்மர் திருட்டு அச்சத்தில் விவசாயிகள்
ADDED : பிப் 06, 2025 10:42 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
சில மாதங்களாக ராமாபுரம், புளியங்குண்டா, காவேரிராஜபுரம், வீரக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய கிணறுகளில் இருந்த மின்மோட்டார் மற்றும் மின் ஒயர்கள் திருடப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரத்தூர் கிராமத்தில், அடைக்கலம், 45, மற்றும் ஞானசுதன், 50, ஆகியோரின் விவசாய நிலங்களில் இருந்த ஒற்றை மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மரை திருடர்கள் திருடி சென்றனர். இதில், 40 கிலோ காப்பர் மற்றும் 120 லிட்டர் ஆயில் இருக்கும் இதன் சந்தை மதிப்பு ஒரு லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரான்ஸ்பார்மர் திருடப்பட்டதால், ஆறு ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச முடியாமல் விளைந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும், இரவு நேரங்களில் மின்மோட்டார், ஒயர்கள் திருடப்பட்டு வந்த நிலையில், தற்போது டிரான்ஸ்பார்மர் திருடப்பட்டதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதை தடுக்க திருவாலங்காடு காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.