/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் வடிகால்வாயை துார்வாருவதில் பாராமுகம் ஆறு கிராமங்களின் விவசாயிகள் அதிருப்தி
/
மழைநீர் வடிகால்வாயை துார்வாருவதில் பாராமுகம் ஆறு கிராமங்களின் விவசாயிகள் அதிருப்தி
மழைநீர் வடிகால்வாயை துார்வாருவதில் பாராமுகம் ஆறு கிராமங்களின் விவசாயிகள் அதிருப்தி
மழைநீர் வடிகால்வாயை துார்வாருவதில் பாராமுகம் ஆறு கிராமங்களின் விவசாயிகள் அதிருப்தி
ADDED : அக் 16, 2025 12:56 AM

பொன்னேரி: ஆறு கிராமங்களின் வடிகால்வாயை துார்வாருவதில் அலட்சியமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தின் மீது, விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
பொன்னேரி அடுத்த அரவாக்கம், மத்ராவேடு, மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஏருசிவன், ஆசானபூதுார்மேடு ஆகிய கிராமங்களில், 2,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.
இங்குள்ள விவசாய நிலங்களையொட்டி, 3 கி.மீ.,க்கு வடிகால்வாய் உள்ளது. இக்கால்வாய் வஞ்சிவாக்கம் ஏரியில் முடிகிறது.
மழைக்காலங்களில், விவசாய நிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீர், இந்த வடிகால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு, நெற்பயிர்களை பாதுகாக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக வடிகால்வாய் துார்வாரப்படாமல், செடிகள் வளர்ந்தும், கரைகள் சேதமடைந்தும் உள்ளது. மேலும், துார்ந்து கிடக்கும் வடிகால்வாயில் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீரை வடிகால்வாயில் வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
மழைநீர் வடிவதற்கு, 10 - 15 நாட்களாகும் நிலையில், நெற்பயிர்கள் அழுகி வீணாகின்றன. ஆண்டுதோறும் மேற்கண்ட கிராமங்களில், 400 - 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
நடப்பாண்டும் சம்பா பருவத்திற்கு நடவு பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வரத்து கால்வாய் துார்வாராததால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை எண்ணி கவலை அடைந்துள்ளனர்.
மழைநீர் மூழ்கும் விவசாய நிலத்தை பார்வையிட வரும் மாவட்ட வேளாண், நீர்வளத்துறை அதிகாரிகள், கால்வாயை துார்வாரி சீரமைப்பதாக உறுதி தருவதாகவும், அதன்பின் எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும், விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நெற்பயிர் மூழ்கும் அபாயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 133 கி.மீ.,க்கு கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. பல ஆண்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் எங்கள் கிராமங்கள் மீது பாராமுகமாக உள்ளது. நடப்பாண்டும் மழைநீரில் மூழ்கி, நெற்பயிர்கள் பாழாகும் நிலையே உள்ளது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.சத்தியநாராயணன், விவசாயி, மடிமைகண்டிகை, பொன்னேரி.