/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாலை நேரம் திறக்காத கால்நடை மருந்தகங்கள் விவசாயிகள் கடும் அவதி
/
மாலை நேரம் திறக்காத கால்நடை மருந்தகங்கள் விவசாயிகள் கடும் அவதி
மாலை நேரம் திறக்காத கால்நடை மருந்தகங்கள் விவசாயிகள் கடும் அவதி
மாலை நேரம் திறக்காத கால்நடை மருந்தகங்கள் விவசாயிகள் கடும் அவதி
ADDED : அக் 06, 2025 11:11 PM
திருத்தணி, கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள், காலை நேரத்தில் மட்டுமே திறக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர், ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய நான்கு கால்நடை துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, ஐந்து கால்நடை மருத்துவமனை, 89 கால்நடை மருந்தகம், 26 கால்நடை கிளை நிலையங்கள், நான்கு நடமாடும் வாகனங்கள் உள்ளன.
இவற்றின் மூலம், கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, பசு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல், ஆடு, கோழிகளுக்கு தடுப்பூசி போடுவது உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.
காலை 8:00 - 12:00 மணி, மாலை 3:00 - 5:00 மணி வரை கால்நடை மருத்துவமனை, மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களை திறந்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களில், காலை நேரத்தில் மட்டுமே திறந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாலை நேரத்தில் மருந்தகம், கிளை நிலையங்கள் திறப்பதில்லை. இதனால் விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால், கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், மதியம் 12:00 மணிக்கு வீட்டிற்கு சென்று விடுகின்றனர். சிலர், தனியாக கிளினிக் வைத்து, பணம் வாங்கிக் கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
எனவே, கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளின் நலன் கருதி, மாலை நேரத்திலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலை நேரத்திலும், மருந்தகம், கிளை நிலையங்களை திறந்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம். தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். - கால்நடை துறை உயரதிகாரி, திருத்தணி.