/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வணிக நிறுவனங்கள் பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம்
/
வணிக நிறுவனங்கள் பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம்
ADDED : ஜன 02, 2025 09:21 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் வரி வருவாயினை அதிகரிக்கும் நோக்கத்தில், வணிக நிறுவனங்களுக்கு திருத்தப்பட்ட பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், வீடு, வணிக வளாகம், அரசு கட்டடங்கள் என, 19,022 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளன. இதற்கு, சொத்து வரியாக, ஆண்டுக்கு, 8 கோடி ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
காலி மனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை மற்றும், கடைகள் வாடகை உள்ளிட்ட வகையில், நகராட்சிக்கு ஆண்டுதோறும், 11 கோடி ரூபாய் வரி வசூலாகிறது.
திருவள்ளூர் நகரில் 3,025 வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த வணிக நிறுவனங்களுக்கு, திருத்தப்பட்ட பதிவு கட்டணம் நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு கூறியதாவது:
திருவள்ளூர் நகரில் அனைத்து வகையான கடைகள், ஹோட்டல், தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்ளிட்டவைகள் புதிய கட்டணம் செலுத்தி தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
உற்பத்தியை பொறுத்தவரை குறு, சிறு, நடுத்தரம் மற்றும் பெரியவை என நான்கு பிரிவு; விற்பனை வணிக நிறுவனம் சிறியது, பெரியது என, தரம் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியான 30 - 90 நாட்களுக்குள், அனைத்து கடை உரிமையாளர்களும், tnurbanpay.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்யும்போதே அவர்களுக்கான கட்டணம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பதிவின் போது, சொத்து வரி, தொழில் வரி கட்டாயம் இணைக்க வேண்டும்.
ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், அதை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.