/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீன் பாசி குத்தகை எடுத்தவர்கள் ஏரி நீரை சூறையாடல் தொடர் அட்டகாசம் நீர்வளத் துறை அலட்சியத்தால் விவசாயிகள் அதிருப்தி
/
மீன் பாசி குத்தகை எடுத்தவர்கள் ஏரி நீரை சூறையாடல் தொடர் அட்டகாசம் நீர்வளத் துறை அலட்சியத்தால் விவசாயிகள் அதிருப்தி
மீன் பாசி குத்தகை எடுத்தவர்கள் ஏரி நீரை சூறையாடல் தொடர் அட்டகாசம் நீர்வளத் துறை அலட்சியத்தால் விவசாயிகள் அதிருப்தி
மீன் பாசி குத்தகை எடுத்தவர்கள் ஏரி நீரை சூறையாடல் தொடர் அட்டகாசம் நீர்வளத் துறை அலட்சியத்தால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஏப் 07, 2025 11:48 PM

திருவாலங்காடு: மீன் பாசி குத்தகை எடுத்தவர்கள், மீன் பிடிக்கும் நோக்கத்தில் ஏரி நீரை டீசல் மோட்டர் வாயிலாக வெளியேற்றி வருகின்றனர். இவர்களின் அட்டகாசம் தொடரும் நிலையில், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு, திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 ஊராட்சிகளில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 576 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 654 சிறு ஏரிகளும் உள்ளன.
மேலும், 3,227 குளம் மற்றும் குட்டைகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் வாயிலாக, மாவட்டத்தில் 2.10 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. மீன் பிடிக்க தகுந்த ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளை, குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விட்டு, மீன் பிடிப்பதற்கான உரிமையை ஒருவருக்கு வாடகைக்கு வழங்குவது மீன்பாசி குத்தகை என அழைக்கப்படுகிறது.
தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 95 சதவீத ஏரிகளை அதிகாரிகள் முன்னிலையில், மீன்பாசி குத்தகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கப்பட்ட நாள் முதல், ஓராண்டு வரை குத்தகைக்கு விடப்படும். தற்போது பல ஏரிகள் ஏலம் விடப்பட்ட காலம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாலங்காடு ஒன்றியம் கணேசபுரம் புலவநல்லூர் ஏரி, பழையனூர் ஏரி மற்றும் தொழுதாவூர் வரத்து கால்வாய் என, ஒன்றியத்தின் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில், தற்போது மீன்பாசி குத்தகைக்கு ஏலம் எடுத்தவர்கள், ஏரியில் மீன்பிடிப்பதற்காக, டீசல் மோட்டார் வாயிலாக தண்ணிரை இறைத்து, மீன் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், விவசாயத்திற்கு நீரின்றி சிரமப்படும் நிலை உள்ளதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த விவசாயி கருப்பையா கூறியதாவது:
மீன்பாசி குத்தகை ஏலம் வாயிலாக சம்பந்தப்பட்ட துறைக்கு வருவாய் வருகிறது. ஏரியின் மதகு, வரவு கால்வாய் போன்றவை, இதிலிருந்து வரும் நிதியில் சீரமைக்கப்படுகிறது. அதேசமயம், பல்வேறு தீமைகளும் உள்ளன.
கடந்த பருவமழையின் போது பெரும்பாலான ஏரிகளில், ஒருபோகம் விவசாயத்திற்கு பயன்படும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால், மீன்பாசி குத்தகைக்கு ஏலம் எடுத்தவர்கள், ஏரி தண்ணிரை வெளியேற்றி மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, எந்த விவசாயி கூறுகிறாரோ, அவரை மீன்பாசி குத்தகை எடுத்தவரிடம் கூறுகின்றனர். அவர்கள் எங்களை மிரட்டுகின்றனர்.
இதனால், விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நீர்நிலைகளில் ஆய்வு செய்து, ஏரி தண்ணீரை வெளியேற்றிவிட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

