/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீன்வள கல்லுாரி மாணவர்கள் துாய்மை பணிகளில் ஆர்வம்
/
மீன்வள கல்லுாரி மாணவர்கள் துாய்மை பணிகளில் ஆர்வம்
ADDED : ஜூன் 15, 2025 08:08 PM
பொன்னேரி:பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட முகாம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு கிராமத்தில் நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் பேராசிரியர் ஜெயசகீலா, மரக்கன்றுகளை நட்டு முகாமை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேவம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி, கோவில் வளாகம், தெருக்கள் ஆகியவற்றை துாய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
நீர்நிலைகளின் ஓரங்களில் மரக்கன்று நடுதல், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமவாசிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், 'பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு' குறித்த விழிப்புணர்வு பேரணியும் மேற்கொண்டனர். இதில், பொன்னேரி நேதாஜி ட்ரீ பவுண்டேஷன் தலைவர் ஸ்ரீதர்பாபு பங்கேற்று, எதிர்கால சந்ததியருக்கு சுகாதாரமான காற்றை விட்டு செல்வதற்கு மரம் வளப்பின் அவசியம் குறித்து பேசினார்.
மீன்வள பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து, மீன்வள உதவி இயக்குனர் முனைவர் ஜனார்த்தனன் பேசினார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், உதவி பேராசிரியர் முனைவர் சுருளிவேல் முகாம் ஒருங்கிணைப்பு செய்தார்.
மீன்வள கல்லுாரி உதவி பேராசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டனர்.