ADDED : ஜன 12, 2025 01:08 AM
பொன்னேரி:பழவேற்காடு அடுத்த, வைரவன்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, மணிபாலன், செல்வம், மோகன். அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பு. இம்மாதம், 8ம் தேதி, ஐந்து பேரும், கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தட்சிணாமூர்த்தி, மணிபாலன், அப்பு ஆகிய மூன்று பேர் கடலில் நீந்தி கரை சேர்ந்தனர். மோகன் மற்றும் செல்வம் ஆகியோர் மாயமாகினர்.
தகவல் அறிந்த மீன்வளத் துறை, காவல்துறை மற்றும் மீனவர்கள் ஒன்றிணைந்து இருவரையும் தேடினர். அப்போது மோகன்,நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். மாயமான செல்வத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று, செல்வத்தின் உடல், முகத்துவாரம் அருகே கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

