/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள்...ஏமாற்றம்:காலியாக திரும்பும் படகுகளால் வருவாய் இழப்பு
/
பழவேற்காடில் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள்...ஏமாற்றம்:காலியாக திரும்பும் படகுகளால் வருவாய் இழப்பு
பழவேற்காடில் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள்...ஏமாற்றம்:காலியாக திரும்பும் படகுகளால் வருவாய் இழப்பு
பழவேற்காடில் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள்...ஏமாற்றம்:காலியாக திரும்பும் படகுகளால் வருவாய் இழப்பு
ADDED : ஜூன் 27, 2025 01:54 AM

பழவேற்காடு:பழவேற்காடில் தடைகாலத்திற்கு பின், மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், மீன் கிடைக்காமல் காலி படகுகளுடன் விரக்தியுடன் கரை திரும்புகின்றனர். வழக்கத்திற்கு மாறாக, கடல் நீரோட்டத்தின் திசை மாறியதால், மீன்கள் வலைகளில் சிக்காமல், வருவாய் இழப்பிற்கு மீனவர்கள் ஆளாகி வருகின்றனர்.
பழவேற்காடு மீனவ பகுதியில் கடல் மற்றும் ஏரியில், 35 மீனவ கிராமங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மீனவர்கள் வலையில் மத்தி, கவலை, அயிலா, வஞ்சிரம், பாறை, சூறை, வவ்வால் என, பல்வேறு வகையான மீன் கிடைக்கும்.
கடந்த ஏப்., 15 முதல் இம்மாதம் 14ம் தேதி வரை, 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இருந்தது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் இந்த தடை விதிக்கப்படுகிறது. பழவேற்காடு பகுதியில் பைபர் படகுகளுக்கு இந்த தடையில்லை.
இருப்பினும், பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழிலை தவிர்த்திருந்தனர். தற்போது, தடைகாலம் முடிந்து, அதிகளவில் மீன் கிடைக்கும் என, எதிர்ப்பார்ப்புடன் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வலை விரித்து பல மணி நேரம் காத்திருந்தும், வலையில் மீன் ஏதும் சிக்காமல், காலி படகுகளுடன் கரை திரும்புகின்றனர். ஒரு சிலர் இரண்டு நாள் கடலில் தங்கி மீன்பிடித்து வந்தாலும், குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்புகின்றனர்.
எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத நிலையில், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். தொழில் மற்றும் வருவாய் இல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
பெரும்பாலான மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில், மீன்பிடி படகுகள், வலைகள் கடற்கரை மற்றும் ஏரிக்கரைகளில் ஓய்வெடுத்து வருகின்றன. மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகளும் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
கடலில் காற்று திசை மாறி வீசுவதால், நீரோட்ட திசையும் மாறி, மீன்வரத்து குறைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
பருவமழை துவங்கும்போது காற்றின் திசை மாறும். அப்போது, மீன்வரத்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:
காற்று வேகமாக வீசும்போது கடல் கலங்கும். அச்சமயங்களில் மீன்வரத்து அதிகளவில் இருக்கும். தற்போது, காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், அலைகளும் குறைந்து கடல் நீர் தெளிவாக இருக்கிறது.
தெளிவான நீரோட்டத்தில், வலைகளில் மீன் சிக்காமல் திசை மாறி சென்றுவிடும். மழைக்காலம் வரத் துவங்கியவுடன், பழவேற்காடு ஏரியில் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது வழக்கம்போல் மீன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டீசலுக்கு கூட கட்டுப்படியாகவில்லை
வழக்கமாக, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நீரோட்டம் இருக்கும். அச்சமயங்களில் எதிர்பார்த்த மீன் கிடைக்கும். வழக்கத்திற்கு மாறாக தற்போது, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கடலின் நீரோட்டம் இருப்பதால், தண்ணீர் தெளிவாக இருக்கிறது. இந்த நீரோட்டத்தில் வலைகள் சுருண்டு கயிறுபோல் ஆகிவிடுகின்றன. இதனால், வலையில் மீன் சிக்குவதில்லை. மேலும், அலையின் சீற்றமும் குறைவாக இருப்பதால், ஆழ்கடலில் இருந்து கரையை நோக்கி வரும் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. தற்போது, கடலுக்கு செல்வோருக்கு கிடைக்கும் மீன், டீசலுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை தான் உள்ளது.
மீனவர்கள்,
பழவேற்காடு.