தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீனவர்கள் எல்லை பிரச்னை: இரு மாநில அதிகாரிகள் பேச்சு

 மீனவர்கள் எல்லை பிரச்னை: இரு மாநில அதிகாரிகள் பேச்சு

 மீனவர்கள் எல்லை பிரச்னை: இரு மாநில அதிகாரிகள் பேச்சு


ADDED : பிப் 01, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: பழவேற்காடு ஏரியில் தமிழக - ஆந்திர மீனவர்கள் இடையே எல்லை பிரச்னை தலை துாக்கியதால், இரு மாநில அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று சமாதான பேச்சு நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரி தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியை இணைத்தபடி, 481 சதுர, கி.மீ., பரப்பு கொண்ட பரந்து விரிந்த ஏரியாகும். இதில் ஆந்திராவை சேர்ந்த, 17 மீனவ கிராமங்கள் உட்பட, மொத்தம், 69 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

ஆந்திர எல்லைக்கு உட்பட்ட, 17 மீனவ கிராமங்களும், தமிழக எல்லைக்கு நொச்சிக்குப்பம், பாட்டைகுப்பம் உள்ளிட்ட ஏழு மீனவ கிராமங்களும் இணைந்து ஆந்திர - தமிழக மீனவர் கூட்டமைப்பு சங்கம் ஏற்படுத்தி ஒற்றுமையாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

மேற்கண்ட தமிழக - ஆந்திர கூட்டமைப்பு மீனவர்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு, புதுகுப்பம் மீனவ கிராமத்தினருக்கும் இடையே அடிக்கடி மீன்பிடி தொழில் செய்வதில் எல்லை பிரச்னை ஏற்படும்.

சம்பவம் இந்த எல்லை பிரச்னை, 2014ம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்தது. தமிழக - ஆந்திர கூட்டமைப்பு மீனவர்கள், சின்னமாங்கோடு கிராமம் மீது படையெடுத்து சென்று, படகுகள், வீடுகளை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, திருவள்ளூர் மாவட்ட ஏ.எஸ்.பி., ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் உட்பட ஏராளமான போலீசார் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார், 197 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், மீண்டும் எல்லை பிரச்னை தலை துாக்கியது. மாங்கோடு மீனவர்கள், எல்லையை நிர்ணயிக்கும் வகையில் பழவேற்காடு ஏரியில் நடப்பட்டிருந்த பனை மரங்களை, மூன்று கி.மீ., கடந்து, ஆந்திர எல்லையில் நட்டதாக அம்மாநில அரசிடம் புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில், இரு மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சு நடத்தப்பட்டது. பொன்னேரி சப் - கலெகடர் ரவிக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், சூளூர்பேட்டை ஆர்.டி.ஓ., உட்பட இரு மாநில போலீஸ், கடலோர காவல், மீன்வளம், வனத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

நிர்ணயம் முதலில், ஆந்திர - தமிழக கூட்டமைப்பு மீனவர்களை அழைத்து பேசினர். அவர்கள் கூறுகையில், 'எல்லை நிர்ணயம் செய்யும் பனைமரங்களை, மூன்று கி.மீ., கடந்து, ஆந்திர எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நட்டுள்ளனர். எல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஆந்திர எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், எல்லையை மீறி தமிழக மீனவர்கள் வர கூடாது ' என தெரிவித்தனர்.

தமிழக மீனவர்கள் கூறும்போது, 'ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிந்ததும், சாய்ந்த மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லும் பனைமரங்களை மீண்டும் நடுவது வழக்கம். எல்லையை கடந்து நாங்கள் நடவில்லை. நிரந்தரமாக எல்லையை நிர்ணயிக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், இரு மாநில கடலோர காவல் துறையினர் முன்னிலையில், இரு மாநில மீனவளத்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் எல்லையை நிர்ணயம் செய்யும் பணிகளை மேற்கொள்வர்.

அதுவரை, எந்த பிரச்னையும் இன்றி இரு மாநில மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us