ADDED : டிச 02, 2024 03:06 AM

திருவாலங்காடு:வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்ஜல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் திருவாலங்காடு அடுத்த பாகசாலை கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக திருவாலங்காடு அடுத்த குப்பம் கண்டிகை, எல்.வி.புரம் ஆகிய பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. எல்.வி.புரம் தரைப்பாலும் வழியாக வாகனங்கள் செல்லாதவாறு திருவாலங்காடு போலீசார் முள்வேலிகளை அமைத்து உள்ளனர். ஆனால் குப்பம் கண்டிகையில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் தரை பாலத்தை கடந்து செல்கின்றனர்.
தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிப்பில் உள்ளனர். அவர்கள் திருவள்ளூர், சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
நேற்று குப்பம் கண்டிகை தரைப் பாலத்தை திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் ஆய்வு செய்தார். மேலும் சேதமடைந்த எல்.வி.புரம், குப்பம்கண்டிகை தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.