/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரைப்பாக்கம் தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
/
தாமரைப்பாக்கம் தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
தாமரைப்பாக்கம் தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
தாமரைப்பாக்கம் தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
ADDED : டிச 14, 2024 01:50 AM

தாமரைப்பாக்கம்:பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் அதிகரித்து வரும் மழைநீர், தாமரைப்பாக்கம் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து, கொசஸ்தலை ஆறு உற்பத்தியாகி, தமிழகத்தின் பள்ளிப்பட்டு, திருத்தணி, பூண்டி, தாமரைப்பாக்கம், காரனோடை, எண்ணுார் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது.
வீணாகும் மழைநீரை சேகரித்து, விவசாய பயன்பாட்டிற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் வகையில், தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, கடந்த, 1862ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.
மொத்தம், 70,000 கன அடி நீர் தேக்கி வைக்கப்படும் இந்த தடுப்பணையால், சுற்றியுள்ள 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, பூண்டி கொசஸ்தலை ஆற்றில், 3.23 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, நீர்த்தேக்கம் கடந்த 1944ல் கட்டப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை மற்றும் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, 15,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்த்தேக்கத்தில், 3.20 டி.எம்.சி., கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதால், நேற்று முன்தினம் 5,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, 12,000 அடியாக உயர்த்தப்பட்டது.
இதன் காரணமாக, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு நிரம்பி வழிந்து, தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மேலும், பூண்டியில் இருந்து எண்ணுார் வரை உள்ள, 29 கிராமங்கள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள், பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.