/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தங்கம், வெள்ளியை தொடர்ந்து ஜரிகை விலையும்... எட்டா கனியாகும் காஞ்சி பட்டு!கிலோவுக்கு ஒரே ஆண்டில் ரூ.50,000 உயர்வு
/
தங்கம், வெள்ளியை தொடர்ந்து ஜரிகை விலையும்... எட்டா கனியாகும் காஞ்சி பட்டு!கிலோவுக்கு ஒரே ஆண்டில் ரூ.50,000 உயர்வு
தங்கம், வெள்ளியை தொடர்ந்து ஜரிகை விலையும்... எட்டா கனியாகும் காஞ்சி பட்டு!கிலோவுக்கு ஒரே ஆண்டில் ரூ.50,000 உயர்வு
தங்கம், வெள்ளியை தொடர்ந்து ஜரிகை விலையும்... எட்டா கனியாகும் காஞ்சி பட்டு!கிலோவுக்கு ஒரே ஆண்டில் ரூ.50,000 உயர்வு
UPDATED : அக் 19, 2025 10:29 PM
ADDED : அக் 19, 2025 09:58 PM

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், பட்டு சேலையின் மூலப்பொருளான ஜரிகை விலை, ஒரே ஆண்டில் கிலோவுக்கு, 50,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தொடரும் விலை உயர்வால், சாமானியர்களால் வாங்க முடியாத பொருளாக, காஞ்சிபுரம் பட்டு சேலை மாறி வருகிறது.
![]() |
காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலைகளை வாங்க விரும்பி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகின்றனர்.
பட்டு சேலை உற்பத்திக்கு, கைத்தறி சங்கத்திலும், தனியாரிடமும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணியாற்றுகின்றனர்.
மூலப்பொருட்கள் விற்பனை, சாயமிடுதல் என, நெசவு பணியின் பிற தொழில்களை நம்பியும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
கூலி பிரச்னை, நெசவாளர்கள் பற்றாக்குறை, விற்பனை மந்தம் என பல்வேறு பிரச்னைகள் நடுவே, தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் தாறுமாறாக உயர்ந்ததால், ஜரிகை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஜரிகை உற்பத்திக்கு, தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. சுத்தமான ஜரிகை கொண்டு நெய்யப்படும் பட்டு சேலைகள், 25 ஆண்டுகளை கடந்தும் நன்றாக உள்ளன.
கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகள் மூலமாக, ஆண்டுக்கு சராசரியாக, 300 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை வியாபாரம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது. இந்த விற்பனை, ஜரிகை விலை ஏற்றம் காரணமாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, 242 கிராம் கொண்ட ஜரிகை தொகுப்பு, கடந்தாண்டு ஏப்ரலில் 20,000 ரூபாயாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டில், தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்ததால், தற்போது ஒரு ஜரிகை தொகுப்பு விலை, 32,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
அதாவது ஒரு கிலோ சரிகை, 85,000 ரூபாயில் இருந்து, 50,000 ரூபாய் உயர்ந்து, 1.35 லட்சம் ரூபாயாக உயர்ந்து விட்டது.
ஒரே ஆண்டில், 12,000 ரூபாய் உயர்ந்துவிட்டதால், பட்டு சேலை விலையை பல ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டிய நிலை, கைத்தறி சங்கங்களுக்கு மட்டுமின்றி, தனியார் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
![]() |
சாதாரண டிசைன் கொண்ட பட்டு சேலைகளில், சிறிதளவு ஜரிகை சேர்த்து நெய்யப்படும் சேலைகள், கடந்தாண்டு வரை 10,000 --- 15,000 ரூபாய் வரை விற்கப்பட்டது.
ஆனால், ஜரிகை விலை உயர்வு காரணமாக, சாதாரண அடிப்படையான முத்துசீர் டிசைன் கொண்ட சேலைகள் கூட, 20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், சாமானியர்களால் வாங்க முடியாத பொருளாக காஞ்சிபுரம் பட்டு சேலை மாறி வருகிறது.
விலையை பார்த்து, வாடிக்கையாளர்கள் வாங்க தயங்குகின்றனர். பட்டு சேலை நெய்ய நெசவாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, விலையும் தாறுமாறாக உயர்ந்து வருவதால், விற்பனையும் சரிந்து, ஒட்டுமொத்த நெசவு தொழிலுக்கும் பெரும் சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டு வருவதாக, பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் உற்பத்தி செய்வது போல, கூட்டுறவு சங்கங் களிலும், ஜரிகை யில் சேர்க்கப்படும் தங்கத்தின் அளவை சற்று குறைக்கலாம். இதனால், ஜரிகை விலை குறைவாக கிடைக்கும். பட்டு சேலை விலையும் உயராது. விற்ப னையை உயர்த்த உதவியாக இருக்கும்.
- விஸ்வநாதன்,
முன்னாள் தலைவர்,
அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் முழுதும் சுத்தமான ஜரிகை கொண்டு நெய்யப்பட்ட பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், ஜரிகை விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதால், பட்டு சேலை விலையை வேறு வழியின்றி உயர்த்த வேண்டியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் வாங்க தயங்குகின்றனர். விற்பனை குறைந்து எங்களுக்கு பெரும் சிரமத்தை அளிக்கிறது.
- மேகநாதன்,
பட்டு சேலை உற்பத்தியாளர், காஞ்சிபுரம்.
- நமது நிருபர் -