/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய இலவச வீட்டுமனை கணக்கெடுப்பு! வீடு கட்டியவர்களுக்கு இ - பட்டா வழங்க நடவடிக்கை
/
ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய இலவச வீட்டுமனை கணக்கெடுப்பு! வீடு கட்டியவர்களுக்கு இ - பட்டா வழங்க நடவடிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய இலவச வீட்டுமனை கணக்கெடுப்பு! வீடு கட்டியவர்களுக்கு இ - பட்டா வழங்க நடவடிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய இலவச வீட்டுமனை கணக்கெடுப்பு! வீடு கட்டியவர்களுக்கு இ - பட்டா வழங்க நடவடிக்கை
ADDED : நவ 26, 2024 05:02 AM
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா குறித்து கணக்கெடுக்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வீட்டுமனையில் வீடுகள் கட்டியவர்களுக்கு இ - பட்டா வழங்கவும், காலியாக உள்ள வீட்டுமனைகளை ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பிரிவு இயங்கி வருகிறது.
இங்கு தாசில்தார், சர்வேயர், இரு இளநிலை உதவியாளர்கள், இரு அலுவலக உதவியாளர்கள், ஒரு டைப்பிஸ்ட், ஒரு ஓட்டுனர் மற்றும் ஒரு உதவியாளர் என மொத்தம் ஒன்பது பேர் பணிபுரிகின்றனர்.
இந்த அலுவலகத்தின் மூலம் வீடுகள் இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நிலம் கையகப்படுத்தி, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 40 ஆண்டுகளாக மாவட்டம் முழுதும், 15,000த்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா அனுபோகம் காகித நகலில் வழங்கப்பட்டுள்ளன.
வீட்டுமனை பெற்ற பயனாளிகள் பெரும்பாலானோர் அங்கு வீடுகள் கட்டாமல் உள்ளதால் நிலத்தில் முட்செடிகள் வளர்ந்தும், ஆக்கிரமிப்பும் நடந்து வருகிறது.
இதையடுத்து, அரசுஉத்தரவின்படி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்களிடம் ஆலோசனை நடத்தி, இதுவரை ஆதிதிராவிடர் களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் குறித்து கணக்கெடுத்து தரும்படி உத்தரவிட்டார்.
தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார், தாலுகா தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகள் எத்தனை? எவ்வளவு நிலப்பரப்பு, எத்தனை பயனாளிகள் வீடுகள் கட்டியுள்ளனர்; காலியான மனைகள் எத்தனை போன்ற விபரங்களை இம்மாதம் இறுதிக்குள் அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து வழங்க வேண்டும் என, கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தற்போது ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டு மனைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில் கடந்த 1980ம் ஆண்டு முதல், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை பட்டாவில் வீடுகள் எத்தனை பேர் கட்டியுள்ளனர்; காலியாக உள்ள மனைகள் குறித்து கணக்கெடுத்து வரப்படுகிறது.
இதில் வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். காலியாக உள்ள மனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்து, அந்த பட்டாக்களை ரத்து செய்து, புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும்.
இதற்கான பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் இணைய பட்டா வழங்கி மற்றும் காலியாக உள்ள மனைகள் குறித்து கணக்கெடுத்து, கலெக்டரிடம் பட்டியல் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.