/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூந்தமல்லி தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் 'டெண்டர்' விடுவதில் அடிக்கடி தகராறு நகராட்சி தலைவியிடம் வாக்குவாதம்
/
பூந்தமல்லி தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் 'டெண்டர்' விடுவதில் அடிக்கடி தகராறு நகராட்சி தலைவியிடம் வாக்குவாதம்
பூந்தமல்லி தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் 'டெண்டர்' விடுவதில் அடிக்கடி தகராறு நகராட்சி தலைவியிடம் வாக்குவாதம்
பூந்தமல்லி தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் 'டெண்டர்' விடுவதில் அடிக்கடி தகராறு நகராட்சி தலைவியிடம் வாக்குவாதம்
ADDED : பிப் 18, 2025 09:29 PM
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில், ஆறு மாதங்களாக, எந்த வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் 'டெண்டர்' விடப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம், பூந்தமல்லி நகராட்சியில் டெண்டர் விட முடிவானது. அதற்காக, நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி நகர தி.மு.க., துணை செயலர் அப்பர் ஸ்டாலின் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, சாலை அமைத்தல், தெரு விளக்கு சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, 1.90 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.
இந்த, டெண்டரை கைப்பற்றுவதில், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமியின் ஆதரவாளரும், பூந்தமல்லி தி.மு.க., நகர துணை செயலருமான அப்பர் ஸ்டாலினுக்கும், நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகருக்கும், நகராட்சி அலுவலகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அப்பர் ஸ்டாலின், நகராட்சி தலைவரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தோர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இது சம்பந்தமாக காஞ்சனா, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பூந்தமல்லி தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலால், டெண்டர் விடுவதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
பூந்தமல்லி நகராட்சி 21 வார்டுகளை உடையது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, போதிய கட்டமைப்புகள் இல்லை.
பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவுநீர் பிரச்னை, சேதமடைந்த சாலைகள், பராமரிப்பின்றி படுமோசமான பேருந்து நிலையம் என, பல்வேறு பிரச்சனைகள், தீர்க்கப்படாமலே உள்ளன.
இதற்கு காரணம், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்தால், பூந்தமல்லி நகராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றும். அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், நகராட்சியை தி.மு.க., கைப்பற்றும். அரசியல் காரணமாக, இந்த நகராட்சியில் பெரும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது.
ஆனால் இம்முறை, ஆட்சியிலும், நகராட்சியிலும் தி.மு.க., கைப்பறியதால், பூந்தமல்லியில் வளர்ச்சி பணிகள் அதிகம் நடக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
எனினும், பூந்தமல்லி நகராட்சியில் கோஷ்டி பூசல் காரணமாக, வளர்ச்சி பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் முடங்கியுள்ளன.
பூந்தமல்லி நகராட்சியின் தலைவரான தி.மு.க.,வைச் சேர்ந்த காஞ்சனா சுதாகர் ஒரு அணியாகவும், முன்னாள் நகராட்சி தலைவரும், பூந்தமல்லி தி.மு.க., நகர செயலருமான திருமலை ஒரு அணியாகவும் உள்ளனர்.
அதேபோல், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், மாவட்ட செயலரும், அமைச்சருமான நாசரின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும் உள்ளனர்.
இந்த நான்கு அணிகளைச் சேர்ந்தோரும், அரசியல் வளர்ச்சிக்காக ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதில் குறியாக உள்ளனர். இவர்கள், நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதால், எந்த பணிகளை எப்போது செய்வது; யார் சொல்வதை கேட்பது என தெரியாமல், அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர்.
மேலும், நகராட்சியில் 'டெண்டர்' எடுப்பது, கமிஷன் தொகையை பங்கு பிரிப்பது என நான்கு அணியினரும் போட்டி போடுவதால், ஆறு மாதங்களுக்கும் மேலாக பணிகளுக்கான டெண்டர் விடப்படப்படவில்லை. இதனால், வளர்ச்சி திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு பகுதிவாசிகள் கூறினர்.