sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாவட்டத்தில் 'சமக்ர ஷிக்சா' திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதிகுறைகிறது:கல்வி திட்ட பணி எண்ணிக்கையும் ஆண்டுதோறும் சரிவு

/

மாவட்டத்தில் 'சமக்ர ஷிக்சா' திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதிகுறைகிறது:கல்வி திட்ட பணி எண்ணிக்கையும் ஆண்டுதோறும் சரிவு

மாவட்டத்தில் 'சமக்ர ஷிக்சா' திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதிகுறைகிறது:கல்வி திட்ட பணி எண்ணிக்கையும் ஆண்டுதோறும் சரிவு

மாவட்டத்தில் 'சமக்ர ஷிக்சா' திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதிகுறைகிறது:கல்வி திட்ட பணி எண்ணிக்கையும் ஆண்டுதோறும் சரிவு


ADDED : ஜூன் 02, 2025 03:55 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்::மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டமான சமக்ர ஷிக்சாவில், ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் எண்ணிக்கையும் சரிவு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 1,490 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

நாடு முழுதும் அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்ற அடிப்படையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம், கடந்த 2002 - 03ம் ஆண்டு துவக்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தையும், கடந்த 2009 - 10ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்கள், மத்திய - மாநில அரசு ஒருங்கிணைந்த பங்களிப்போடு, அனைவருக்கும் கல்வி இயக்கம், ராஷ்ட்ரிய மத்திய இடைநிலை கல்வி திட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, 2018 - 19ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி என்ற பெயரில் 'சமக்ர ஷிக்சா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் படி, புதிய பள்ளி துவக்குதல், ஆசிரியர் நியமனம், பள்ளி செல்லா குழந்தைகளை மீட்டெடுத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்புதல், பள்ளி கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், பெண் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன் வாயிலாக, பள்ளிகளுக்கு பாதுகாவலர், மாணவ - மாணவியருக்கு விலையில்லா பாடநுால், சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் சேர்க்கைக்கான கட்டணம், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், இலவச சீருடை, விலையில்லா பாடநுால், சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை உள்ளிட்ட 19 திட்டங்களுக்கு, 71.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த நிதியில், தொடக்க நிலை மற்றும் இடைநிலை கல்வி திட்டத்தில், 19 வகைகளில், மொத்தம் 4,23,635 திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்த ஆண்டுகளில், திட்ட நிதி படிப்படியாக குறைக்கப்பட்டதால், அதற்கேற்றவாறு நிறைவேற்றப்படும் பணிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

அந்த வகையில், 2022 - 23ம் ஆண்டு 43.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கடுத்த, 2023 - 24ம் ஆண்டு, 29.49 கோடி ரூபாயாக குறைந்தது. தற்போது, 2024 - 25ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு பாதியாக குறைக்கப்பட்டு, 26.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் திட்ட பணிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால், மாணவ- - மாணவியரின் திறன்களை மேம்படுத்தும் சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக, கல்வித்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், அதிகளவில் கிராம பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. புதிய கட்டடம் கட்டுவது, சீருடை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு, முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மேம்பாடு என, முக்கியமான திட்ட பணிகளை மட்டுமே தேர்வு செய்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி பயில்வது, பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டி தருவது உள்ளிட்ட பிரதான பணிகளுக்கு நிதி ஆதாரம் கிடைப்பதில்லை.

இதனால், அனைவருக்கும் சமநிலை கல்வி கிடைப்பதில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு சறுக்கலாக உள்ளது. எனவே, மத்திய - மாநில அரசுகள், தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய கல்வியை வழங்க, கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி கல்வி திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு

ஆண்டு பணிகளின் எண்ணிக்கை நிதி ஒதுக்கீடு (ரூ.கோடியில்)

2021 - 22 4,23,635 71.51

2022 - 23 35,039 43.33

2023 - 24 82,678 29.49

2024 - 25 80,114 27.28






      Dinamalar
      Follow us