/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் வரும் 2ல் கந்த சஷ்டி
/
திருத்தணி கோவிலில் வரும் 2ல் கந்த சஷ்டி
ADDED : அக் 30, 2024 06:31 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்த சஷ்டி விழா, ஆறு நாட்கள் நடைபெறும். அந்த வகையில், வரும், 2ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்குகிறது.
அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 8:30 மணிக்கு உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 2ம் தேதி மூலவருக்கு தங்க கவசம், 3ம் தேதி திருவாபரணம், 4ம் தேதி வெள்ளி கவசம், 5ம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, 6ம் தேதி மாலை புஷ்பாஞ்சலியும், 7ம் தேதி நண்பகலில் உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் குறிப்பிடத்தக்கது.