/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாரம்பேடு ஏரி நீரை வெளியேற்றி மண் அள்ளும் கும்பல்...கபளீகரம் : அதிகாரிகள் கண்காணிப்பில்லாமல் பறிபோகும் நீர்நிலைகள்
/
மாரம்பேடு ஏரி நீரை வெளியேற்றி மண் அள்ளும் கும்பல்...கபளீகரம் : அதிகாரிகள் கண்காணிப்பில்லாமல் பறிபோகும் நீர்நிலைகள்
மாரம்பேடு ஏரி நீரை வெளியேற்றி மண் அள்ளும் கும்பல்...கபளீகரம் : அதிகாரிகள் கண்காணிப்பில்லாமல் பறிபோகும் நீர்நிலைகள்
மாரம்பேடு ஏரி நீரை வெளியேற்றி மண் அள்ளும் கும்பல்...கபளீகரம் : அதிகாரிகள் கண்காணிப்பில்லாமல் பறிபோகும் நீர்நிலைகள்
ADDED : ஆக 10, 2025 10:23 PM

சோழவரம்,:'தண்ணீர் இல்லாத, வறண்ட பகுதியில், அனுமதிக்கப்பட்ட இடத்திலும், 0.90 மீட்டர் ஆழத்திலும் ஒரே சீராக மண் எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, அருகில் உள்ள இடத்தில் மண் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும், மாரம்பேடு ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரை ராட்சத மோட்டார் உதவியுடன் வெளியேற்றி ஏரியில் மண் அள்ளும் கும்பல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 336, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 581 என மொத்தம், 917 ஏரிகள் உள்ளன.
அவ்வப்போது, ஏரிகளை ஆழப்படுத்தி, மழைநீரை சேகரிப்பதற்காக, அவற்றில் உள்ள மண்ணை எடுக்க நீர்வளம் மற்றும் கனிமவளத் துறையினர், அனுமதி வழங்குகின்றனர்.
அனுமதி காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் இடையே, 132 கி.மீ., தொலைவிற்காக சென்னை எல்லை சாலை திட்டத்திற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து மண் அள்ளப்படுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் மண் அள்ளப்படுகிறது.
கடந்த, இரண்டரை ஆண்டுகளாக அரசுப் பணிகளுக்கு மட்டும், ஏரிகளில், மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, மாவட்டத்தின் சில பகுதிகளில், வணிக பயன்பாட்டிற்காகவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டரைபெரும் புதுார், நெமிலி அகரம், பொன்னேரி வட்டம், மாரம்பேடு ஆகிய ஏரிகளில் சவுடு மண் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதில், நெமிலி அகரம் ஏரியில், 45 நாட்களுக்கு, 4,000 லோடு; பட்டரைபெரும்புதுார் ஏரியில், 45 நாட்களுக்கு, 2,000 லோடு; மாரம்பேடு ஏரியில், 60 நாட்களுக்கு, 5,000 லோடு சவுடு மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதில், 'தண்ணீர் இல்லாத, வறண்ட பகுதியில், அனுமதிக்கப்பட்ட இடத்திலும், 0.90 மீட்டர் ஆழத்திலும் ஒரே சீராக மண் எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, அருகில் உள்ள இடத்தில் மண் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், சவுடு மண் குவாரி எடுத்த ஒப்பந்ததாரர்கள், அரசின் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், அனுமதி பெற்ற இடத்தை விட அருகில் உள்ள பகுதியிலும், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், 15 - 20 அடி ஆழத்திற்கு மண் எடுத்து வருகின்றனர்.
போலி ரசீதுகளை தயாரித்து, தினமும், ஒவ்வொரு ஏரியிலும், 500க்கும் மேற்பட்ட லோடு சவுடு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் மாரம்பேடு ஏரியில், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி மண் அள்ளி வருகின்றனர். அங்கு, 10க்கும் அதிகமான ராட்சத மோட்டார்கள் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி வீணாக்கி வருகின்றனர்.
மண் அள்ளி செல்வதற்காக, நுாற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. அள்ளப்படும் மண் ஒரக்காடு, பூதுார், ஆங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் வீட்டு மனைப்பிரிவுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதிகாலையில் துவங்கும் மண் குவாரி, இரவு, 9:00மணிவரை செயல்ப டுகிறது. சவுடு மண்ணுடன், மணலும் அள்ளப்படுகிறது. குவாரிகளில் நடக்கும் அட்டூழியத்தால், ஏரிகளின் மண்வளம் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குவாரிக்கும், இரண்டு மாத கால அவகாசம் அல்லது, அனுமதிக்கப்பட்ட லோடு, இதில் எது முதலில் முடிகிறதோ, அத்துடன் குவாரி உரிமம் காலாவதியானதாக கருதப்படும்.
கவனிப்பு தற்போது அரசு அனுமதித்த 'லோடை', விட ஒவ்வொரு ஏரியிலும், பல மடங்கு கூடுதலாகவே மண் அள்ளப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவும் முடிந்து உள்ளன.
காவல், வருவாய், கனிமவளம், நீர்வளத்துறை ஆகியோர் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அதிகாரிகளுக்கு உரிய 'கவனிப்பு' இருப்பதால், அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் அதிருப்தி யுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
குவாரி உரிமம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்ணயித்த அளவை விட அதிக ஆழத்தில் தோண்டி, மணல் எடுத்து, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு, கூடுதல் விலையில் விற்பனை செய்கின்றனர்.
மாரம்பேடு ஏரியில் ஏரியில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, சவுடு மண் அள்ளுகின்றனர்.
அதிகாரிகளின் ஆசியுடன் கனிமவளம், நீர்வளம் கபளீகரம் செய்யப்படுகிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.