/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் மீண்டும் புற்றீசல் போல வளரும்...ராட்சத பேனர்கள்!: 'கல்லா' கட்டும் அதிகாரிகளால் உயிர்பலி அபாயம்
/
திருவள்ளூரில் மீண்டும் புற்றீசல் போல வளரும்...ராட்சத பேனர்கள்!: 'கல்லா' கட்டும் அதிகாரிகளால் உயிர்பலி அபாயம்
திருவள்ளூரில் மீண்டும் புற்றீசல் போல வளரும்...ராட்சத பேனர்கள்!: 'கல்லா' கட்டும் அதிகாரிகளால் உயிர்பலி அபாயம்
திருவள்ளூரில் மீண்டும் புற்றீசல் போல வளரும்...ராட்சத பேனர்கள்!: 'கல்லா' கட்டும் அதிகாரிகளால் உயிர்பலி அபாயம்
ADDED : பிப் 22, 2025 10:54 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் மற்றும் மொபைல் போன் டவர்கள் வைப்பது, புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன. அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொள்ளும் அதிகாரிகள், பெரிய நிறுவனங்களிடம் கண்ணை மூடிக்கொண்டு 'கை' நீட்டுவதால், சாலையோரங்களில் பயமுறுத்தும் ராட்சத பேனர்களால் உயிர்பலி அபாயம் அதிகரித்துள்ளது.
அனுமதியில்லாமல் உயரமான கட்டடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
கடந்த 2019ல், சென்னை பள்ளிக்கரணை நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், சுபஸ்ரீ, 23, என்ற இளம் பொறியாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் விளம்பர பதாகைகளுக்கு தடை விதித்தன.
சில ஆண்டுகளாக, 'கப்சிப்'பாக இருந்த அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள், மீண்டும் தலைதுாக்க துவங்க, பேனர் கலாசாரம் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் மற்றும் திருமண வரவேற்பு பேனர்கள், மொபைல் போன் டவர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகின்றன.
மேலும், திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம் எதிரில், ஜே.என்., சாலை, சி.வி., சாலை, திருவள்ளூர் - ஆவடி புறவழிச் சாலை, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தாராட்சி, பூண்டி, ஒதப்பை, திருத்தணி பஜார் பகுதி, மேல் திருத்தணி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, கே.ஜி.கண்டிகை.
மீஞ்சூர், பொன்னேரி, தச்சூர், காரனோடை, கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பு, சிறுவாபுரியில் பேனர் வைப்பது அதிகரித்துள்ளது.
பிரமாண்ட கட்டடங்களிலும், வணிக வளாகங்களிலும், வாகன ஓட்டிகளின் கண்களை பறிக்கும் வகையில், ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், பதாகைகள், பலத்த காற்று வீசும்போது பறந்து சென்று, சாலைகளில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் மேல் விழும் நிலை உள்ளது.
இந்த பேனர்கள் வைப்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
சமீப காலமாக தனியார் நிறுவனங்கள் சார்பில் உரிய அனுமதியின்றி தெருக்கள், சாலைகள், மின் கம்பங்கள் மற்றும் கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சாலை சந்திப்பு, வளைவு பகுதி, மின் கம்பங்களில் விதி மீறி ராட்சத பேனர்களை தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமலும், உரிய அனுமதியின்றியும், அதிகாரிகளை தங்களது பண பலத்தால் விலைக்கு வாங்கி, தனியார் நிறுவனத்தினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆங்காங்கே விளம்பர பேனர்களை அமைத்து வருவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
அரசியல் கட்சியினர், பகுதிவாசிகள் தங்கள் ஆடம்பரத்தை காண்பிக்கவும் ராட்சத பேனர்கள் வைப்பது, சம்பிரதாயமாக்கி வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது, பேனர் வைப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் பணியாற்றிய மாநகராட்சி வருவாய் துறை அலுவலர் ஒருவர், இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் வாயிலாக, அவர் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதும் அம்பலமானது. இதையடுத்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேலும் ஒரு மாநகராட்சி வருவாய் அலுவலர் உரிய அனுமதி பெறாமலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 'டேமேஜ் கட்டணம்' செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி, கல்லா கட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், விளம்பர பேனர்கள் வைப்பவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து, நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.
இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் உண்மைத் தன்மையை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மீண்டும் ஒரு விபத்து, உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, விதி மீறும் அதிகாரிகளை கண்டறிந்து, களையெடுக்க முதல்வர் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.