/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆபத்தான படகு பயணத்திற்கு இனி... 'குட்பை'! :கொசஸ்தலையில் உயர்மட்ட பாலம்
/
ஆபத்தான படகு பயணத்திற்கு இனி... 'குட்பை'! :கொசஸ்தலையில் உயர்மட்ட பாலம்
ஆபத்தான படகு பயணத்திற்கு இனி... 'குட்பை'! :கொசஸ்தலையில் உயர்மட்ட பாலம்
ஆபத்தான படகு பயணத்திற்கு இனி... 'குட்பை'! :கொசஸ்தலையில் உயர்மட்ட பாலம்
ADDED : மே 14, 2024 11:02 PM

மீஞ்சூர்:மழைக்காலத்தில் தரைப்பாலம் மூழ்கி விடுவதால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 16.50 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைவதால், ஆபத்தான படகு பயணத்திற்கு விமோசனம் கிடைக்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் உள்ளிட்ட கிராமங்களில், 740 குடியிருப்புகளில், 9,000க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ளவர்கள் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு பள்ளிபுரம்- கவுண்டர்பாளையம் கிராமங்களுக்கு இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றை கடந்து சென்று வருவர்.
இதற்காக ஆற்றின் குறுக்கே, 50ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட, தரைப்பாலம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அச்சமயங்களில் இந்த தரைப்பாலம் மூழ்கி, 4 -6 அடி உயரத்திற்கு மழைநீர் செல்கிறது. இதனால் மேற்கண்ட கிராமவாசிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கிறது.
மேற்கண்ட கிராமவாசிகள், அவசர உதவி தேவை என்றாலும் வெளியேறுவதற்கு மாற்று வழி இல்லாத நிலையில் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர்.
மழைக்காலங்களில் மேற்கண்ட கிராமங்கள் தீவாக மாறுவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஒரு மாதத்திற்கு தரைப்பாலம் மூழ்கி இருப்பதால், ஆபத்தான படகு பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதமும், கொசஸ்தலை ஆற்றில், தரைப்பாலம் மூழ்கியது. கிராமவாசிகள் உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல் தவித்தனர்.
பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளின் உதவியுடன் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கிராமவாசிகளின் நீண்ட கால கோரிக்கையை தொடர்ந்து, தற்போது அங்குள்ள தரைப்பாலத்திற்கு மாற்றாக புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மீஞ்சூர் ஒன்றியம் வாயிலாக, நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 16.50 கோடி ரூபாய் செலவில் பணி நடைபெறுகிறது. இந்த பாலமானது, 10 துாண்களுடன், 200 மீ. நீளம், 10மீ. அகலத்தில் அமைகிறது.
தற்போது அங்கு பில்லர்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ராட்சத இயந்திரங்கள் உதவியுடன், பள்ளம்தோண்டப்பட்டு, அதில் இரும்பு கம்பிகளை பொருத்தி, பில்லர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு மழைக்காலத்திற்குள் பில்லர்கள் அமைத்து, அதன் மீது பாலம் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, வெள்ளப்பெருக்கின்போது, தரைப்பாலம் மூழ்கி, ஆண்டுதோறும் தவிப்பிற்கு உள்ளாகும் சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் கிராமவாசிகளுக்கு விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளதால் அவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
எங்கள் கிராமங்களை சுற்றிலும் இரு கிளைகளாக கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தீவாக மாறிவிடும்.
தரைப்பாலமும் மூழ்கி விடுவதால், வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து விடும். அவசர உதவிகளும் கிடைக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஆற்று வெள்ளப்பெருக்கின்போது, பெரும் இன்னலுக்கு ஆளாகிறோம். தற்போது உயர்மட்ட பாலம் அமைவதால், இதிலிருந்து எங்களுக்கு விமோசனம் கிடைக்க இருக்கிறது.
இவ்வாறு கூறினர்.

