/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிப்காட் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலை மூழ்கும் அபாயம் அரசு துறையினர் கூடி பேசி முடிவு எடுக்க கோரிக்கை
/
சிப்காட் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலை மூழ்கும் அபாயம் அரசு துறையினர் கூடி பேசி முடிவு எடுக்க கோரிக்கை
சிப்காட் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலை மூழ்கும் அபாயம் அரசு துறையினர் கூடி பேசி முடிவு எடுக்க கோரிக்கை
சிப்காட் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலை மூழ்கும் அபாயம் அரசு துறையினர் கூடி பேசி முடிவு எடுக்க கோரிக்கை
ADDED : நவ 19, 2025 05:21 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி மற்றும் நிலத்தடி நீர் பாதிக்க காரணாக இருக்கும் வரத்து கால்வாய் மூடப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிப்காட் வளாக தொழிற்சாலைகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாய் வழியாக தாமரை ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
இக்கால்வாய் வழியாக தொழிற்சாலைகள் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் திறந்து விடுவதால், தாமரை ஏரி மாசடைந்தது.
இதனால், கும்மிடிப்பூண்டி நகர் பகுதியின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், வெள்ளி, தங்கம், பித்தளை, செம்பு உள்ளிட்ட உலோகங்கள் கருப்பு நிறத்தில் மாறி வருவதுடன், சரும நோய் பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
நிலத்தடி நீர் பாதிப்புக்கு காரணமான, தாமரை ஏரியின் நீர்வரத்து கால்வாயை, நீர்வளத்துறையினர் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் மூடினர். நேற்று காலை, கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
கால்வாய் அடைக்கப்பட்டதால், மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள தொழிற்சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலைகளில், 2.5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் கடும் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களின் இன்ஜின்களில் தண்ணீர் புகுந்ததால், வாகனங்கள் பழுதானது. மேலும், தொழிற்சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி அடுத்த வாரம் கனமழை பெய்தால், தேசிய நெடுஞ்சாலையும், சில சிப்காட் தொழிற்சாலைகளும் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
எனவே, நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிப்காட் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

