/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனைமரங்களை பாதுகாப்பதில் அரசு அதிகாரிகள்...அலட்சியம் : தொடர்ந்து வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு
/
பனைமரங்களை பாதுகாப்பதில் அரசு அதிகாரிகள்...அலட்சியம் : தொடர்ந்து வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு
பனைமரங்களை பாதுகாப்பதில் அரசு அதிகாரிகள்...அலட்சியம் : தொடர்ந்து வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு
பனைமரங்களை பாதுகாப்பதில் அரசு அதிகாரிகள்...அலட்சியம் : தொடர்ந்து வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு
UPDATED : செப் 03, 2025 02:05 AM
ADDED : செப் 03, 2025 01:39 AM

கும்மிடிப்பூண்டி:பனைமரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசு துறையினர் அலட்சியம் காட்டி வருவதால், கும்மிடிப்பூண்டி பகுதியில் தொடர்ந்து பனைமரங்கள் வெட்டப்படுகின்றன. பனைமரங்களை பாதுகாத்திட மக்களுக்கும் அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பனை மரங்களை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முக்கியமானது. பனைமரங்கள் வறட்சியை தாங்கி வலுவாக நிற்பதுடன், பனை வெள்ளம், பாய் உள்ளிட்ட பல பொருட்களை தந்து, விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிலச்சரிவை தடுப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தமிழகத்தில் பனங்'கள்' தடை செய்த பின் பனைமரங்களை பாதுகாப்பதில், மக்கள் மத்தியில் அலட்சியம் அதிகரித்து வருகிறது. இயற்கை அரணாகவும் வாழ்வாதாரம், பெருக்கவும் வயல் வெளி வரப்புகளில் முன்னோர்களால் வளர்க்கப்பட்ட பனைமரங்கள், 'கள்' தடை விதிப்புக்கு பின் சூறையாடப்பட்டு வருகின்றன.
செங்கல் சூளைகளுக்கு விறகாகவும், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் போதும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் தனி நபர்களால் பனைமரங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பனைமரங்களை பாதுகாக்கும் நோக்கில், சட்டசபையில் 110 விதியின் கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பனை மரம் வெட்ட வேண்டும் என்றால் கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும். மேலும் பனை மரத்தை வெட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில் தொடர்ந்து பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள ஓபசமுத்திரம் கிராமத்தில், ஆயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஊராட்சி அலுவலகம் நிறுவும் பணிக்காக, 40 பனைமரங்களை பொக்லைன் வாயிலாக வேரோடு அகற்றப்பட்டன. விசாரணையில், கிராமத்தின் முக்கிய நபர்கள், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பொறியாளருடன் சேர்ந்து எந்த அனுமதியும் இன்றி பனை மரங்களை அகற்றியது தெரியவந்தது.
கிராம மக்களுக்குதான் விழிப்புணர்வு இல்லை என்றால், அரசு துறை அலுவலருக்கும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், கும்மிடிப்பூண்டி அருகே பெரியபுலியூர் அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில், 70 பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டி அகற்றினர். இது குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பூங்குழலி, ஆகஸ்ட் 28ம் தேதி, பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பனைமரங்கள் வெட்டியது குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக வழங்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், ஒன்பது நாட்களுக்கு பின் வழங்கு பதிந்த போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.