sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி நகராட்சியில் அரசின் திட்டங்கள்...முடக்கம்! அதிகாரிகளின் மெத்தனத்தால் வரிப்பணம் வீண்

/

பொன்னேரி நகராட்சியில் அரசின் திட்டங்கள்...முடக்கம்! அதிகாரிகளின் மெத்தனத்தால் வரிப்பணம் வீண்

பொன்னேரி நகராட்சியில் அரசின் திட்டங்கள்...முடக்கம்! அதிகாரிகளின் மெத்தனத்தால் வரிப்பணம் வீண்

பொன்னேரி நகராட்சியில் அரசின் திட்டங்கள்...முடக்கம்! அதிகாரிகளின் மெத்தனத்தால் வரிப்பணம் வீண்


ADDED : ஏப் 21, 2025 11:27 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, பொன்னேரி நகராட்சியில் எரிவாயு தகனமேடை, கழிவுநீர் வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கி செலவிடப்பட்டு, அதிகாரிகளின் மெத்தன போக்கால், அவை பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடப்பதுடன், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் மக்களின் வசதிக்காக, திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு சுடுகாடு பகுதியில், கடந்த 2022ல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.44 கோடி ரூபாயில், 2,800 சதுரஅடி பரப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.

சடலங்களை எரிவாயு வாயிலாக எரிப்பதற்கான இயந்திரங்கள், டிராலி, எரிவாயு குழாய் இணைப்பு, மின் இணைப்பு, சுற்றுச்சுவர், சாலை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த 2023 ஜூலை மாதம் கட்டுமான பணிகள் முடிந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்காக காத்திருந்தது. கடந்தாண்டு மார்ச் மாதம் அதற்கான அனுமதியும் கிடைத்தது. கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக எரிவாயு தகன மேடை திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

முதல்வர் திறந்து வைத்து எட்டு மாதங்கள் முடிந்தும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல், கட்டடம் பூட்டியே கிடப்பதுடன், திட்டம் முடங்கியுள்ளது. கட்டடத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து உள்ளது.

அதே வளாகத்தில், கடந்த 2023ல், 15வது மானிய குழு நிதியில், 10 லட்சம் ரூபாய் செலவில் ஈமச்சடங்கு மண்டபம் கட்டப்பட்டது. அந்த கட்டடமும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. சரியான திட்டமிடல் இன்றி கட்டடம் அமைத்துள்ளதால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.

அதேபோல, கடந்தாண்டு நவம்பர் மாதம், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 45 லட்சம் ரூபாயில், 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் ஊர்தி வாகனம் வாங்கப்பட்டது.

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை, திருவள்ளூர் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

இதற்காக, குடியிருப்புகளுக்கு லோடு ஒன்றிற்கு, 2,000 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு, 3,000 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வாகனத்தை இயக்க டிரைவர், கழிவுநீரை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் பயிற்சி பெற்ற பணியாளர் ஒருவர் என, இருவரை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி கொள்ளவும், அவர்களுக்கு ஊதியம் வழங்க, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் நகராட்சியில் நிதியும் ஒதுக்கப்பட்டது.

பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் வரை, நகராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், இந்த கழிவுநீர் வாகனம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கழிவுநீர் வாகனம் வாங்கி ஆறு மாதங்களான நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல், நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது.

இதுபோன்று, பல்வேறு திட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து, அவை முறையாக செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளன. நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால், மக்களில் வரிப்பணம் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பொன்னேரி நகராட்சி எரிவாயு தகனமேடை அமைத்த பின், மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் அதேபோன்ற திட்டத்தை செயல்படுத்தி, பயனுக்கு கொண்டு வந்தது. பொன்னேரியில் திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராமலேயே முடங்கியுள்ளது.

கழிவுநீர் வாகனம் பயனின்றி, நகராட்சி அலுவலகத்திலேயே நிற்பதால், அதன் உதிரிபாகங்கள் செயலிழந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நகராட்சியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்களும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன. மேலும், பல்வேறு திட்ட பணிகள் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளன. சரியான திட்டமிடல் இன்றி அதிகாரிகள் பணிகளை மேற்கொள்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us