/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் துவக்கம்...ரூ.1,166 கோடி: 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் துவக்கம்...ரூ.1,166 கோடி: 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் துவக்கம்...ரூ.1,166 கோடி: 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் துவக்கம்...ரூ.1,166 கோடி: 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்
ADDED : ஏப் 18, 2025 09:46 PM

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், 1,166 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்; பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
''திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 63,124 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அதிகமாக பட்டா வழங்குவது இந்த நிகழ்ச்சியில்தான்,'' என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். மாவட்டத்தில், மூன்று உயர்மட்ட பாலங்கள், 16 பள்ளிக்கட்டடங்கள், 1,000 கனவு இல்லங்கள் உட்பட, 418 கோடி ரூபாயில் செலவில் மேற்கொள்ளப்பட்ட, 6,760 கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
முதல்வர் வருத்தம்
கனவு இல்லம் திட்டத்தின்கீழ், 4,197 வீடுகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 377 வீடுகள், ஒன்பது தடுப்பணைகள் என, 390 கோடி செலவில், 7,369 புதிய கட்டுமான பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மாவட்டத்தை சேர்ந்த, 63,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள், விபத்து நிவாரண உதவி திட்டம், 30,202 பயனாளிகள் பயன்பெறும் வகையிலான மகளிர் சுயஉதவிக்குழு வங்கி கடன்கள், 1,000 விவசாயிகளுக்கு பசுந்தாள் விதைகள் வழங்கினார்.
மேலும், 32,636 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 1,432 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் என, 2.02 லட்சம் பேருக்கு, 357 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசு விழாவில் பங்கேற்க வந்த முதல்வருக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வழிநெடுகிலும், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொன்னேரியில் நடந்து சென்று, சாலையில் இரண்டு புறங்களிலும் நின்றிருந்த பொதுமக்களுடன் முதல்வர் கை குலுக்கினார்.
முதல்வருடன் பலர், மொபைல் போன்களில் செல்பி எடுத்துக் கொண்டனர். பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றார்.
இதனால், விழாவில் முதல்வர் பங்கேற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்காக விழா அரங்கில் காத்திருந்த பொதுமக்களிடம், முதல்வர் வருத்தம் தெரிவித்தார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தின் நுழைவாயிலும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு பாதை அமைத்த திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதிதான் நவீன தமிழகத்தின் சிற்பி. அதற்கு அடையாளமாக விளங்கும் இடம்தான் திருவள்ளூர் மாவட்டமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் தான்.
மணலி, அம்பத்துார், திருவள்ளூர், கும்மிடிபூண்டி, ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, மறைமலை நகர், திருவள்ளூர் மற்றும் சென்னையை சுற்றி இருக்கக்கூடிய தொழில்வளாகங்கள் எல்லாம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை தான்.
தி.மு.க., ஆட்சியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு எவ்வளவோ பணிகள் செய்து கொடுத்துள்ளோம். அ.தி.மு.க.,வின் இருண்ட ஆட்சிகாலத்தில், 10 ஆண்டுகளாக முடங்கி இருந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகள், நான்கு ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
வாழ்விடம் அவசியம்
இன்று, 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதுமட்டுமின்றி, 418 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறேன்.
மேலும். 2.02 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். ஒட்டுமொத்தமாக கூட்டி பார்த்தால், 1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இந்த விழா அமைந்துள்ளது.
இந்த விழாவில் எனக்கு மகிழ்ச்சி தருவது, பல ஆண்டுகளாக இருந்த பிரச்னைக்கு தீர்வு கண்டதுதான். மக்கள் பயனடையும் வகையில் பட்டா வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 63,124 பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறேன்.
நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிகமாக பட்டா வழங்குவது, இந்த நிகழ்ச்சியில்தான். வாழ்விடம் என்பது அவசியம். அந்த உரிமையை வழங்குவதான் நமது அரசு.
இவ்வாறு முதல்வர் பேசினார்.