/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இலவச வீட்டு மனை கேட்டு அரசு பஸ் சிறைபிடிப்பு
/
இலவச வீட்டு மனை கேட்டு அரசு பஸ் சிறைபிடிப்பு
ADDED : மார் 14, 2024 10:20 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ளது அம்பேத்கர் நகர், பெரியகாலனி. இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்வது. இங்கு வசிக்கும் சிலருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு இன்னும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. இதில், 100 குடும்பத்தினருக்கு, ஊத்துக்கோட்டை வருவாய்த் துறை வாயிலாக கடந்த, 1992ம் ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்த் துறை பதிவேட்டில் ஏற்றப்படவில்லை.
இதனால் இவர்களுக்கு பட்டா வழங்கியும் எவ்வித பலனும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முதல் தாசில்தார் வரை பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் நேற்று மதியம், ஊத்துக்கோட்டையில் இருந்து மாம்பாக்கம் வழியே பெரியபாளையம் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் மற்றும் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு  நடத்தினர்.
இதில் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின் பேருந்து  விடுவிக்கப்பட்டது.

