ADDED : அக் 25, 2025 08:01 PM
திருவள்ளூர்: உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, நவ., 1ல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, நவ., 1 காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல் மற்றும் ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடி க்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயல்பாடுகள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கூட்டத்தில், ஊராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ளலாம். பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

