/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலிமனை வரி வசூலிக்க கிராம சபையில் தீர்மானம்
/
காலிமனை வரி வசூலிக்க கிராம சபையில் தீர்மானம்
ADDED : நவ 24, 2024 03:15 AM

திருப்பாச்சூர் ஊராட்சியில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில், 'சொத்துவரி வசூலிப்பது போல, காலிமனைக்கும் வரி வசூலித்து, ஊராட்சியின் நிதி வருவாயை பெருக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில், சென்னை மாநகரை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் நேற்று காலை, 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கிராம சபை கூட்டம் 526 ஊராட்சிகளிலும் நடந்தது.
திருவள்ளூர், கடம்பத்துார், கும்மிடிப்பூண்டி மற்றும் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களை கவுரவித்தல், சிறந்த மகளிர் குழுவினருக்கு பாராட்டு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சியில், துணை தலைவர் கெத்சியாள் வசந்தகுமார், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரி போன்று, காலிமனை வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால், வரி வருவாய் அதிகரித்து, மக்கள் நலத்திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஆதாயம் கிடைக்கிறது.
இதே போல், ஊராட்சி பகுதியில் ஆட்சேபனையற்ற காலிமனைகளை பத்திரப்பதிவு செய்து, அனுபவித்து வருவோரிடம் இருந்து, வரி வசூலிக்க வேண்டும். இதனால், ஊராட்சியில் நிதி வருவாய் அதிகரித்து, கிராமத்தில் திட்டப்பணிகள் செயல்படுத்தலாம்' என, மக்கள் சார்பில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் உள்பட 16 தீர்மானங்கள் கிராம சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு ஊராட்சியில் தலைவர் குணசுந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில், 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் சேகர் தீர்மானம் வாசிக்கும் போது, பெண்கள் எழுந்து, தெரு குழாய்களில் குடிநீர் கருப்பு நிறமாக வருவதால், பயன்படுத்த முடியவில்லை என, குற்றஞ் சாட்டினர்.
மேலும், முருக்கம்பட்டு ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, கையுறை, குப்பை அள்ள இடுபொருட்கள் வழங்கவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி ஊராட்சியில் ஓடை கால்வாயில், அரசு பணிகளுக்காக மண் அள்ள திட்டமிடப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணை வெட்டி கரையினை பலப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழவேற்காடு ஊராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்; நுாறு நாள் பணியாளர்கள், 470 பேர் ஒரே பணித்தளத்தில் பணிபுரிகின்றனர். அதை இரண்டாக பிரித்து, இரண்டு பணித்தளங்களை உருவாக்க வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்திப்பட்டு ஊராட்சியில், பட்டமந்திரி - அனல்மின்நிலையம் செல்லும் சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நிற்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. அப்பகுதியில் மின்விளக்குகளும் எரிவதில்லை. கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்கவும், மின்விளக்குகளை பொருத்தவும் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 61 ஊராட்சிகளில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அனைத்து ஊராட்சிகளிலும், துாய்மை பணியாளர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சி தலைவர் தில்லைக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடந்த, 5 ஆண்டுகளில் அரசுக்கு சொந்தமான இடம் மீட்டல், இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது, மருத்துவ முகாம், தனி நபர் கழிப்பறை, சாலைப் பணி, அங்கன்வாடி மைய கட்டடம் உள்ளிட்ட 2 கோடி ரூபாய் பணிகள் குறித்த புத்தகம் வெளிடப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி பகுதியில் காலிமனை வரி வசூலிப்பது 2022 முதல் நடைமுறையில் உள்ளது. ஆனால் கிராம ஊராட்சியில் நடைமுறையில்லை. நகராட்சி பகுதியில் உள்ள காலிமனைகள் ஏ, பி, மற்றும் சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு சதுரடிக்கு, 40, 60 மற்றும் 80 பைசா வீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
கிராம ஊராட்சி பகுதிகளில் காலிமனை வரி, தற்போது வசூலிப்பதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் வாயிலாக காலிமனை வரி வசூலிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் காலிமனை வரிவசூலிப்பதை போல, கிராம ஊராட்சி பகுதிகளிலும் காலிமனை வரி வசூலித்தால் பல கோடி ரூபாய் வசூலாகும். இதனால் கிராமப்புற ஊராட்சிகளில் நிதி ஆதாரம் திரளும். ஊராட்சியில் நிலவும் நிதி பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் குழு -