/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டி பேருந்து பணிமனை மற்றும் நிலையம்...இலவு காத்த கிளி:கைவிடப்பட்ட திட்டத்தால் காத்திருந்த பயணியர் ஏமாற்றம்
/
கும்மிடிப்பூண்டி பேருந்து பணிமனை மற்றும் நிலையம்...இலவு காத்த கிளி:கைவிடப்பட்ட திட்டத்தால் காத்திருந்த பயணியர் ஏமாற்றம்
கும்மிடிப்பூண்டி பேருந்து பணிமனை மற்றும் நிலையம்...இலவு காத்த கிளி:கைவிடப்பட்ட திட்டத்தால் காத்திருந்த பயணியர் ஏமாற்றம்
கும்மிடிப்பூண்டி பேருந்து பணிமனை மற்றும் நிலையம்...இலவு காத்த கிளி:கைவிடப்பட்ட திட்டத்தால் காத்திருந்த பயணியர் ஏமாற்றம்
ADDED : ஜூலை 07, 2025 02:28 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் மாநகர் போக்குவரத்து கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் நிறுவ, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்த நிலையில், கும்மிடிப்பூண்டியில் இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டதாக, நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர் தெரிவித்திருப்பது, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், இரு சிப்காட் வளாகங்கள், சிட்கோ மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 110 கிராமங்களில் இருந்து, 20,000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மக்கள் நலன்
இவர்கள் வசிக்கும் கிராமங்களில் இருந்து, சிப்காட் பகுதிகளுக்கு பேருந்து வசதி கிடையாது. இதை தொடர்ந்து, 'கும்மிடிப்பூண்டியில் மாநகர் போக்குவரத்து கழக பணிமனை மற்றும் மாநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும்' என, 2012 அக்டோபரில், தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.
தொடர்ந்து, 2013 ஜூன் மாதம், சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், 4.70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இடம் ஒதுக்கி, 12 ஆண்டுகளாகியும், கும்மிடிப்பூண்டி மக்களை பொறுத்தவரை, மாநகர் போக்குவரத்து கழக பணிமனை, பேருந்து நிலையம் என்பது, எட்டாக்கனியாகவே உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து பிரச்னையை சமாளிக்க முடியாமல், கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இடம் ஒதுக்கிய போது, 2015ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பின்படி ஒதுக்கிய இடத்திற்கு, 2.75 கோடி ரூபாய் என, தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
மாநகர் போக்குவரத்து கழகம் தொகையை செலுத்த தாமதித்ததால், 2017ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பின்படி, 4.10 கோடி ரூபாய் என, நிர்ணய தொகை ஏற்றம் கண்டது. தொகை அதிகமானதால், மாநகர் போக்குவரத்து கழகம், திட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்தனர்.
அதன்பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். 2020ம் ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் தீர்ப்பு வெளியானது. அதில், 'மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் திட்டம் என்பதால், மதிப்பீட்டு தொகையை பாதியாக குறைக்க கருத்தில் கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 2021ம் ஆண்டு நிர்ணயித்த தொகையை பாதியாக குறைத்து, இறுதியில் 2.05 கோடி ரூபாய் பணம் செலுத்தும்படி, மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆணை பிறப்பித்தார். 2022 மார்ச் 1ம் தேதி, 2.05 கோடி ரூபாய் தொகையை, மாநகர் போக்குவரத்து கழகம் செலுத்தியது.
காத்திருப்பு
கடந்த 2022 மே மாதம், மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க, அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்தார். 2022 நவம்பர் மாதம், மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்து ஆணை வழங்கப்பட்டது.
ஒரு வழியாக அனைத்து பிரச்னைகளும் கடந்து, கட்டுமான பணிகள் துவங்கப்படும் என, ஆர்வமுடன் காத்திருந்த மக்களுக்கு, அமைச்சரின் அறிவிப்பு நம்பிக்கையை அளித்தது. ஆனால், அதிகாரியின் தற்போதைய அறிவிப்பு இடி விழுந்ததை போல் இருப்பதாக, பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் பேசுகையில், ''கும்மிடிப்பூண்டியில் மாநகர் கழக போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
தற்போது, மாநகர் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனநரும், முன்னாள் திருவள்ளூர் கலெக்டருமான பிரபுசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், 'பாடியநல்லுார் மாநகர் போக்குவரத்து பணிமனையில் இருந்து, மாநகர் பேருந்துகள் இயக்கப்படுவதால், கும்மிடிப்பூண்டியில் இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டது' என தெரிவித்துள்ளார்.
அதிகாரியின் இந்த அறிவிப்பால், கும்மிடிப்பூண்டி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக மறுபரிசீலனை செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு காரியத்திற்காக நீண்ட காலம் காத்திருந்து, அந்த காரியம் நடக்காமல் போவதால் ஏற்படும் ஏமாற்றம், இலவு காத்தக் கிளிக்கு ஒப்பிட்டுபேசுவர்.
இலவம் காயானது மற்ற காய்களை போல பழமாகி கீழே விழாது. காயாகவே மரத்திலேயே முற்றி, கடைசியில் வெடித்துச் சிதறும்.
இது தெரியாமல், ஒரு கிளி ஓர் இலவம் காயைக்கண்டு அது செந்நிறமாகப் பழுக்கும்போது கொத்தி தின்னலாம் என்றெண்ணி, அந்தக் காயையே கவனித்துக்கொண்டு காத்திருந்ததாம்.
அதேநிலைமை, கும்மிடிப்பூண்டி பேருந்து பணிமனை மற்றும் நிலையத்திற்காக காத்திருந்த பயணியரின் நிலைமையாகி உள்ளது.