/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காற்றில் நுண்ணிய மாசு துகள்கள் அதிகம் கலந்துள்ள தமிழக நகரங்களில் கும்மிடிப்பூண்டி... முதலிடம் 2024 ஆண்டில் உலக காற்று தர அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவலால் மக்கள் அதிருப்தி

ADDED : மார் 21, 2025 11:30 PM

கும்மிடிப்பூண்டி, உலக காற்று தர அறிக்கை 2024ன் படி, தமிழகத்தில் உள்ள நகரங்களில், அதிக அளவில் நுண்ணிய மாசு துகள்கள் (பி.எம்., 2.5) கலந்துள்ள பகுதியில், கும்மிடிப்பூண்டி முதல் இடத்தில் உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உற்பத்தி வகை தொழிற்சாலைகளாக உள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகள், மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும். மாறாக, பல தொழிற்சாலைகள் விதிமுறைகள் மீறி இயக்கப்படுவதால் காற்று, நீர், நிலத்தின் தரம் வெகுவாக குறைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த காற்று மாசுபாடு தொழில்நுட்ப நிறுவனம், 2024ல் உலக காற்று தர அறிக்கையை, கடந்த 11ம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2024ல் உலகளவில், 8,954 நகரங்களில், காற்றில் கலந்த பி.எம்., 2.5 எனப்படும் நுண்ணிய மாசு துகள்களின் அளவீடுகளை பட்டியலிட்டது.
அதில், உலக நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. தமிழகளவில், கும்மிடிப்பூண்டி முதல் இடத்தில் உள்ளது. உலகளவில், 8,954 நகரங்களில், கும்மிடிப்பூண்டி 101வது இடத்தில் உள்ளது. அதிர்ச்சி அளிக்கும் உலக காற்று தர அறிக்கையால், கும்மிடிப்பூண்டி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அளவீடு நிர்ணயம்
பி.எம்., 2.5 நுண்ணிய மாசு துகள் அளவீடுகளுக்கு, உலக சுகாதார அமைப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி, ஒரு 'க்யூபிக்' மீட்டரில், 25 மைக்ரோகிராம் அளவீடுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கிறது.
இந்தியாவில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 60 மைக்ரோ கிராம் வரை இருக்கலாம் என, தெரிவிக்கிறது. கும்மிடிப்பூண்டியில், 2024ல், ஒரு 'க்யூபிக்' மீட்டரில், 53.2 மைக்ரோகிராம் அளவு பி.எம்., 2.5 மாசு துகள்கள் காற்றில் கலந்துள்ளது. இது, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவீடுகளை விட, இரு மடங்கு அதிகம்.
இந்த நுண்ணிய மாசு துகள்கள், கும்மிடிப்பூண்டியில் அதிகளவில் காற்றில் கலப்பதற்கு காரணமாக இருப்பது, தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு புகை மட்டுமே என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தினர், அதை தடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் சார்பில் கூறுகையில், 'காற்றின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டது.