/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமன் ஜெயந்தி கோலாகலம் திருப்பந்தியூரில் 71,000 வடமாலையுடன் அருள்பாலிப்பு
/
அனுமன் ஜெயந்தி கோலாகலம் திருப்பந்தியூரில் 71,000 வடமாலையுடன் அருள்பாலிப்பு
அனுமன் ஜெயந்தி கோலாகலம் திருப்பந்தியூரில் 71,000 வடமாலையுடன் அருள்பாலிப்பு
அனுமன் ஜெயந்தி கோலாகலம் திருப்பந்தியூரில் 71,000 வடமாலையுடன் அருள்பாலிப்பு
ADDED : டிச 31, 2024 01:19 AM

திருவள்ளூர் மாவட்டம் முழுதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.
கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று, பஞ்சமுக அனுமனுக்கு, 71,000 வடை மாலை அலங்கார தரிசனமும், தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது.
திருமழிசை பேரூராட்சியில், ஒத்தாண்டீஸ்வரர் கோவிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் உபக்கோவிலான 400 ஆண்டுகள் பழமையான வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருமழிசை அடுத்த புதுச்சத்திரம் அருணாசலேஸ்வரர் மற்றும் அனுமன் கோவிலில், சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனையும் நடந்தது. பின் மாலையில் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அனுமன் அருள்பாலித்தார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரில் 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 22ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை மூல மந்திர ஹோமம் நடந்தது. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம், வடைமாலை சாத்தி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது.
கும்மிடிப்பூண்டி
புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, உற்சவ மூர்த்திகளுக்கு மஹா அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, வால்மீகி ராமாயண பாராயணம் செய்தல் நிகழ்ச்சியும், மாலையில் பிரகாரத்திற்குள் சுவாமி உலா சென்றார். இரவில் பந்தசேவை பஜனை நடந்தது.
ஊத்துக்கோட்டை
பெருமுடிவாக்கம் பகுதியில் கோதண்டராம சுவாமி கோவிலில், காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் வடை மாலை சூட்டப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே, வெலமகண்டிகை பகுதியில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது.
திருத்தணி
திருத்தணி அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில், மூலவர் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி, செந்துாரம் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு காப்புகள் அணிவிக்கப்பட்டன. இரவு உற்சவர் வீதியுலா நடந்தது.
திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கே.ஜி.கண்டிகை
கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூலவருக்கு பால், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் நடந்தது. பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள, 35 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
பொன்னேரி
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் லட்சுமியம்மன் கோவிலில் ஐந்து அடி பீடம், 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அனுமன் சிலையுடன், தனி சன்னிதி அமைக்கப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது.
மாலையில், பொன்னேரி, வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் திருக்குடைகளுடன் உற்சவ பெருமான் ராமபக்த அனுமன் சுவாமிகளை பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின், அனுமனுக்கு 2,008 வடமாலை சாற்றப்பட்டது.
-- நிருபர் குழு -