sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி - தச்சூர்- சாலையில் கனரக வாகனங்களுக்கு... தடை வண்டலுார் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தல்

/

பொன்னேரி - தச்சூர்- சாலையில் கனரக வாகனங்களுக்கு... தடை வண்டலுார் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தல்

பொன்னேரி - தச்சூர்- சாலையில் கனரக வாகனங்களுக்கு... தடை வண்டலுார் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தல்

பொன்னேரி - தச்சூர்- சாலையில் கனரக வாகனங்களுக்கு... தடை வண்டலுார் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தல்


ADDED : ஜன 27, 2025 11:36 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, ஜன. 28- போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பொன்னேரி - தச்சூர்- - மீஞ்சூர் நெடுஞ்சாலையில் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த வாகனங்கள், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில், எண்ணுார், அதானி ஆகிய துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், கப்பல் கட்டும் நிறுவனம், எரிவாயு மற்றும் பெட்ரோலிய முனையங்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

குறுகலான சாலைகள்


துறைமுகங்கள் மற்றும் மற்ற தொழில் நிறுவனங்ளுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையான பொன்னேரி - தச்சூர்- - மீஞ்சூர் சாலை வழியாக பயணிக்கின்றன.

மேலும், மணலி, வல்லுார், கொண்டக்கரை, எலவம்பேடு, நாலுார் ஆகிய பகுதிகளில் உள்ள கன்டெய்னர் கிடங்குகளுக்கும், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு தினமும், 5,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இதனால், பொன்னேரி மற்றும் மீஞ்சூர் நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில், பணிக்கு சென்று வருபவர்கள், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த வழித்தடத்தில் உள்ள பொன்னேரி பழைய பஸ் நிலையம், செங்குன்றம் சாலை ஆகியவை குறுகலாக இருப்பதால், கனரக வாகனங்கள் எதிர் எதிரே செல்லும்போதும், வளைவுகளில் திரும்பும்போதும், ஒன்றுடன் ஒன்று உரசியபடி செல்கின்றன.

கனரக வாகனங்கள் வரிசையாக செல்லும்போது, கார், பஸ், பைக் உள்ளிட்டவை தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன. அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.

காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

மீஞ்சூர், அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி, மணலி பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு சென்று வரும் வாகனங்கள், மீஞ்சூர்- - வண்டலுார் வெளிவட்ட சாலை, சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை என, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு சென்று வர வசதியாக சாலைகள் உள்ளன.

இருந்தும், சுங்க கட்டணங்களை தவிர்க்க கனரக வாகனங்கள் மீஞ்சூர் பஜார், மேட்டுப்பாளையம், வேண்பாக்கம், பொன்னேரி, தச்சூர் வழியாக பயணிக்கின்றன.

கனரக வாகன தடை


கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் உரிய நேரத்தில் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தலின்படி, மாநில நெடுஞ்சாலையான தச்சூர் - -பொன்னேரி - -மீஞ்சூர் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவில் கூறியிருப்பதாவது:

துறைமுகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள் மீஞ்சூர்- - வண்டலுார் வெளிவட்ட சாலையை பயன்படுத்தாமல் பொன்னேரி வழியாக வந்து செல்கின்றன.

பொன்னேரி பகுதியில் பள்ளி, கல்லுாரிகள் அதிகம் இருப்பதால், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிக இடையூறு ஏற்படுகிறது.

அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி, தச்சூர்- - பொன்னேரி - -மீஞ்சூர் சாலையில் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

ரூ.1,500 அபராதம்


இரவு, 9:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை, இந்த வழித்தடத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. தடை விதிக்கப்பட்ட நேரத்தில், கனரக வாகனங்கள் எந்தவித காரணத்திற்காகவும், தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் சாலையின் ஓரங்களில் நிறுத்தக்கூடாது.

அவ்வாறு தடை செய்யப்பட்ட நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிவரும் காலங்களில், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் சாலையை பயன்படுத்த வேண்டும்.

தடையை மீறும் கனரக வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டத்தின்படி, இருபிரிவுகளில், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் உள்ளது.

அறிவிப்பு பலகைகள்


இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மேற்கண்ட உத்தரவு தொடர்பான அறிக்கை, மீஞ்சூர், அத்திப்பட்டு, காட்டுப்பள்ளியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தச்சூர், மீஞ்சூர் பகுதிகளில் இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்.

ஏற்கனவே இந்த பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் இல்லை. தற்போது அமைந்துள்ளதால், போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் தலைமையில் தொடர்ந்து கண்காணித்து, தடையை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us