/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூருக்குள் கனரக வாகனங்களுக்கு...அனுமதியில்லை:நெரிசலை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை
/
திருவள்ளூருக்குள் கனரக வாகனங்களுக்கு...அனுமதியில்லை:நெரிசலை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை
திருவள்ளூருக்குள் கனரக வாகனங்களுக்கு...அனுமதியில்லை:நெரிசலை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை
திருவள்ளூருக்குள் கனரக வாகனங்களுக்கு...அனுமதியில்லை:நெரிசலை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை
ADDED : ஜன 09, 2025 02:38 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில் நிலவும் நெரிசலை தவிர்க்க, போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி மாற்றம் செய்துள்ளனர். இதன்படி, செங்குன்றம் வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும், காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, திருவள்ளூருக்குள் வராமல், மாற்றுச் சாலையை பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நகரம் அமைந்துள்ளது. இந்நகர் வழியாக, சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், ஆவடி மற்றும் செங்குன்றம் பகுதியில் இருந்து வரும் இரண்டு, நான்கு மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மாவட்ட தலைநகரான திருவள்ளூரில், இந்த வாகனங்கள் அனைத்தும் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலையை பயன்படுத்தியே, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று வருகின்றன.
அதே போல, வெளிமாநிலங்களில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் காக்களூர் தொழிற்பேட்டைக்கு வரும் வாகனங்களும் இச்சாலைகளையே பயன்படுத்தி வருகின்றன. இதனால், திருவள்ளூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
காலை, மாலை பள்ளி, கல்லுாரி செல்வோர், பணிக்கு செல்வோர் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல், பரிதவித்து வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக, ஜே.என்.சாலை - சி.வி.நாயுடு சாலை சந்திக்கும் காமராஜர் சிலை அருகிலும், திருவள்ளூர் - செங்குன்றம் சாலை சந்திக்கும் தேரடியும் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளிலிருந்து கனரக வாகனங்கள், வேன், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் திருவள்ளூர் நகராட்சி வழியாக பூந்தமல்லி, சென்னை, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன. நகரின் முக்கிய சாலைகள் குறுகலாக இருப்பதால், கனரக வாகனங்கள் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஈக்காடு சொசைட்டி நகர் - வள்ளுவர்புரம் - காக்களூர் ஏரிக்கரை சாலையை இணைக்கும் வகையில், ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு, 2.21 கோடி ரூபாயில், புதிதாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
சாலை பணி நிறைவடைந்த நிலையில், செங்குன்றம் பகுதியில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும், இச்சாலையைப் பயன்படுத்த வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் மாற்றம் செய்துள்ளனர்.
இதன்படி, செங்குன்றம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியாக காக்களூர் ஏரிக்கரை சென்று பின், ஆவடி புறவழிச்சாலை வழியாக, திருவள்ளூர் ஜே.என்.சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக, காலை முதல், இரவு வரை, தேரடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.

