/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பால பணி...இறுதி கட்டம்!:30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
/
கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பால பணி...இறுதி கட்டம்!:30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பால பணி...இறுதி கட்டம்!:30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பால பணி...இறுதி கட்டம்!:30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
ADDED : அக் 03, 2024 02:35 AM

சோழவரம்:கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்திற்கு துாண்கள், ஓடுபாதை அமைக்கப்பட்டு இணைப்பு சாலைக்கான பணிகளுடன் திட்டம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதால், 30 கிராமங்களின் நீண்டநாள் பிரச்னைக்கு விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடியூர், வழுதிகைமேடு, பசுவன்பாளையம், கண்ணியம்பாளையம், அட்டப்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, பொன்னேரி வந்து செல்கின்றனர்.
இந்த கிராமங்களுக்கும், பொன்னேரி பகுதிக்கும் இடையே கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது. ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மட்டும் ஆற்றில் உள்ள வழித்தடங்கள் வழியாக பொன்னேரிக்கு வருகின்றனர்.
பூண்டி, சோழவரம் நீர்தேக்கங்களின் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் பயணிப்பதால், மழைக்காலங்களில் அதிகப்படியான தண்ணீர் ஆர்ப்பரித்து எண்ணுார் கடலுக்கு செல்கிறது.
ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு, ஆறு மாதங்கள் வரை அதில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில், இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் உள்ள வழித்தடங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
அச்சமயங்களில், கிராமவாசிகள் காரனோடை, ஜனப்பச்சத்திரம், தச்சூர் கூட்டுசாலை வழியாக, 15 -- 22 கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனர்.
காலவிரயம், எரிபொருள் வீணாவது, குறித்த நேரத்தில் பணிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஆகியவற்றால், கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி, பொன்னேரி சென்று வருவதற்கு ஏதுவாக, கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதன் பயனாக, மடியூர்-நாலுார் - கம்மார்பாளையம் கிராமங்கள் இடையே, கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, நபார்டு நிதியுதவியின் கீழ், 18.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 2022 ஜூலை மாதம் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டன. ஆற்றின் குறுக்கே, 210 மீ., நீளம், 12 மீ., அகலத்தில் பாலத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக ஆற்றிலும், கரையிலும் ஒன்பது பில்லர்கள் அமைக்கப்பட்டன. அதன் மீது வாகனங்கள் செல்லவதற்கும், பாதசாரிகள் நடந்து செல்லவதற்கு என, தனித்தனியாக ஓடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்தாண்டு இறுதியில் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்ட நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
நீர் இருப்பு குறைந்ததை தொடர்ந்து, ஐந்து மாதங்களாக பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த உயர்மட்ட பாலமானது, பொன்னேரி -- திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சீமாவரம் - -காரனோடை நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இருக்கும்.
இதற்காக இருபுறமும், 300 மீ., தொலைவிற்கு இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துாண்கள், ஓடுபாதை என பாலத்திற்கு, 95 சதவீத பணிகள் முடிந்து, இறுதி கட்டமாக பக்கவாட்டு தடுப்புச்சுவர், இணைப்பு சாலைகளில் மண் நிரப்பி சாலை அமைத்தல் உள்ளிட்டவையே எஞ்சியுள்ளன.
தற்போது, அதற்கான பணிகளும் நடைபெறுகின்றன. உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்து உள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மழைக்கு முன் பாலம் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், நீண்டகால பிரச்னைக்கு தற்போது விடிவுகாலம் பிறக்க உள்ளது. இதனால் கிராமவாசிகள் மழைக்காலங்களில் எளிதாக பொன்னேரி பகுதிக்கு சென்று வரமுடியும். பாலத்தில் மின்விளக்கு, 'சிசிடிவி' உள்ளிட்டவைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிராம மக்கள்,
நெற்குன்றம்.