விதிமீறி கனிமவளம் கடத்தி வரும் லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி: அதிரடி சோதனையில் நான்கு லாரிகள் பறிமுதல்
விதிமீறி கனிமவளம் கடத்தி வரும் லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி: அதிரடி சோதனையில் நான்கு லாரிகள் பறிமுதல்
UPDATED : ஆக 07, 2026 07:57 PM
ADDED : ஆக 07, 2026 07:53 PM

திருவள்ளூர்:
தமிழக கனிமவளத் துறை இயக்குனர் உத்தரவையடுத்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு, மண், ஜல்லிக்கற்கள் ஏற்றிவரும் லாரிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை, மாவட்ட அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை நடந்த அதிரடி சோதனையில், நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, எண்ணுார் - மாமல்லபுரம் ஆறு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றிலும், மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்களின் விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன.
அந்த பணிகளுக்கு தேவையான, சவுடு மண் மற்றும் கிராவல் மண் எடுக்க, திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில், குவாரிகள் இயங்கி வந்தன.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, த.வெ.க., ஆட்சி அமைத்ததும், மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவில் கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து வகையான குவாரிகளையும் ரத்து செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, வணிக மற்றும் அரசுப் பணிகளுக்கான சவுடு மண் குவாரிகள் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில், கட்டுமான பகுதிகளுக்கு தேவையான குண்டு கல், கிராவல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தனியார் லாரி உரிமையாளர்கள், ஆந்திராவில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட லோடுகளில், மண், ஜல்லி, கிராவல் உள்ளிட்ட கனிமவளங்களை, அனுமதியின்றி லாரிகளில் கடத்தி வந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சத்தியவேடு, காரூர், வி.ஆர்.கண்டிகை, பீரகுப்பம், பிச்சாட்டூர் உள்ளிட்ட, தமிழக எல்லை அருகில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சவுடு மண் குவாரிகள் இயங்கி வருகின்றன. அங்கிருந்து, தமிழகத்திற்கு சவுடு மண் கடத்தப்படுகிறது.
இவ்வாறு வரும் சவுடு மண் லாரிகளில், பெரும்பாலானவை போலி ரசீது வாயிலாக, சவுடு மண், ஜல்லி, கிராவல் மண் கடத்தல் நடந்து வருகிறது. இதனால், ஆந்திரா மற்றும் தமிழக அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, திருத்தணி பொன்பாடி, ஊத்துக்கோட்டை, எளாவூர் ஆந்திர - தமிழக சோதனைச் சாவடிகள் வழியாகவும், கே.கே.சத்திரம், சத்தியவேடு, பென்னலுார்பேட்டை ஆகிய ஆந்திர மாநில எல்லைகள் வழியாகவும், ஆந்திர மண் தமிழகத்திற்கு கடத்திவரப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களாகியும், திருவள்ளூர் மாவட்டத்தில், புதிதாக சவுடு மண் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
சவுடு மண் குவாரிகளுக்கு அனுமதி கேட்டு, மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்தில் பெறப்பட்ட பல்வேறு விண்ணப்பங்களும், எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் பிரபுசங்கர், “ஆந்திர மாநிலத்திலிருந்து, சட்ட விரோதமாக கனிமங்கள் கடத்தி வரும் வாகனங்களை முறையாக கண்காணித்து, விதிமீறி கடத்தலில் ஈடுபடும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட சுரங்கத்துறை அதிகாரிகள், அனுமதியின்றி கொண்டு வரப்படும் லாரிகளை பறிமுதல் செய்யும் பணியை, நேற்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் நித்யா கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், தற்போது வணிக சவுடு மண் குவாரி இயங்காத நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து, சவுடு மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சோதனை சாவடிகள் மற்றும் ஆந்திர மாநிலம் வழியாக வரும் லாரிகளை, பகல் நேரத்திலும், நள்ளிரவிலும் கண்காணித்து சோதனையிட்டு வருகிறோம்.
நேற்று முன்தினம் அதிகாலை, வருவாய் துறையினருடன், ஆந்திர மாநிலத்தில் இருந்து போந்தவாக்கம் வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, உரிய அனுமதியின்ற ஜல்லி கற்கள் கொண்டு வரப்பட்ட இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதுமட்டுமின்றி, பி - சாண்ட் எனும் செயற்கை மணல் மற்றும் சாதாரண மண் கொண்டு வந்த இரு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட நான்கு லாரிகளும், பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மேலும், லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் நால்வர் மீதும், காவல் துறை வாயிலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
