/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மானியம், திட்டங்களில் பயன் பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை
/
மானியம், திட்டங்களில் பயன் பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை
மானியம், திட்டங்களில் பயன் பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை
மானியம், திட்டங்களில் பயன் பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை
ADDED : பிப் 17, 2025 11:02 PM

திருவாலங்காடு
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2.35 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், 1.70 லட்சம் ஏக்கர் நிலங்களில், நெல், காய்கறி உள்ளிட்ட பலவித பயிர்களை, 65,000 விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கவுரவ உதவித்தொகை மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி, மத்திய -- மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.
மத்திய அரசு வழங்கும், பிரதமர் கவுரவ உதவித்தொகை, விவசாயி அல்லாத நபர்களுக்கு சென்றுவிடக்கூடாது என, இணையவழியில் பதிவு செய்து, மத்திய அரசு கவுரவ நிதியை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது.
அதேபோல, விதைகள், வேளாண் கருவிகள் என, அனைத்து வித சலுகைகளும் ஆதார் அட்டை, விவசாயிகளின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
மத்திய -- மாநில அரசு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளே, மீண்டும் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாத சிறு, குறு விவசாயிகள் பயன்பெற முடியவில்லை. மேலும், இதுபோன்ற விவசாயிகளுக்கு வங்கி கடனும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் சுயவிபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் துறை துவக்கி உள்ளது.
இந்த பதிவேற்றத்தின் வாயிலாக அனைத்து தரப்பு விவசாயிகளின் சுய விபரங்கள், ஒரே அடையாள அட்டையில் வந்துவிடும். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி மத்திய -- மாநில அரசு அறிவிக்கும் திட்டங்களில் பயன்பெறலாம்.
மேலும், வேளாண் இயந்திரங்கள், வேளாண் வங்கி கடன் ஆகியவை பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்கு, விவசாயிகளின் விபரங்களை வேளாண் துறை அலுவலர்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக, பிரதமர் கவுரவ நிதி பெறும் விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். அதன்பின் சிறு, குறு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் விபரமும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
மேலும், வீடுதோறும் சென்று தகவலை பதிவேற்றம் செய்யும் பணியில் வேளாண் துறை ஊழியர்கள் செய்கின்றனர். சிறப்பு முகாம்களும் நடத்த உள்ளோம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயிகள் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

