நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் அதிகரிப்பு!அலட்சிய அதிகாரிகளால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் அதிகரிப்பு!அலட்சிய அதிகாரிகளால் விபத்து அபாயம்
UPDATED : ஆக 08, 2026 06:17 PM
ADDED : ஆக 08, 2026 06:11 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள உயரமான கட்டடங்களில் விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன. இயற்கை சீற்றத்தால் சேதமடையும் விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். அதிகாரிகள் அலட்சியமே இதற்கு காரணமென, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையில், 2019 செப்டம்பர் மாதம், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, 23, என்ற இளம்பெண் கீழே விழுந்து, பின்னால் வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பேனர் வைப்பது அதிகரித்து வருகிறது.
அதேபோல், திருமணம், பிறந்த நாள், நினைவஞ்சலி, படிப்பு போன்றவற்றிற்கு கூட நெடுஞ்சாலையோரம் பேனர் வைப்பது தொடர்ந்து வருகிறது. மேலும், மாநில - தேசிய நெடுஞ்சாலையோர மின்கம்பங்களிலும் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்களால், வாகனங்களில் செல்வோர் கவனம் சிதறி விபத்தில் சிக்குவதும் தொடர்கைதையாகி உள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல் துறையினர், கண்டும் காணாமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், உயரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், இயற்கை சீற்றங்களால் கிழிந்து தொங்குவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில இடங்களில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள், மின்கம்பிகள் மீது விழுந்து மின்தடை ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதன்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்தி விளம்பர பேனர் வைக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டு வருகின்றன.
பேனர்கள் வைப்பதை தடுப்பது யார் என்ற குழப்பத்தில், அதிகாரிகள் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் பேனர் வைப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
