ADDED : செப் 28, 2024 07:40 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தொழில் நிறுவனங்களுடான கருத்தரங்கு நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மாவட்ட இணைப்பு முயற்சியானது, தொழில்துறை பங்குதாரர் மற்றும் அரசு துறைகள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு இடையேயான உறவினை வலுப்படுத்துவதற்கு ஒரு தாக்கமான தளமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இதன் நோக்கம் தொழில்துறை தலைவர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையே நேரடி ஈடுபாட்டை எளிதாக்குவதன் வாயிலாக, பல்வேறு துறைகளில் தொழில்துறை வளர்ச்சியினை ஏற்படுத்தும்.
மேலும், திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு குறைபாடுகள், கொள்கை தொடர்பான தடைகள், தொழிலாளர் சிக்கல் மற்றும் வினியோகச் சங்கிலி இடையூறுகள் போன்ற முக்கிய தொழில் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு மன்றமாகவும் இந்த முயற்சி செயல்படுகிறது.
அவர்களின் குறைகள் குறிப்பிட்ட துறைகளில் அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் சென்னை மண்டல, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் லான் வாஹி, துணை இயக்குனர் மற்றும் தலைவர் நாகநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.