/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே பாலம் இணைப்பு சாலை பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல்
/
ரயில்வே பாலம் இணைப்பு சாலை பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல்
ரயில்வே பாலம் இணைப்பு சாலை பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல்
ரயில்வே பாலம் இணைப்பு சாலை பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 19, 2025 01:44 AM

மீஞ்சூர்:மீஞ்சூரில் ரயில்வே மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகளை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, சட்டசபை பொது கணக்கு குழுவினர் அறிவுறுத்தினர்.
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள மீஞ்சூர் -- நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே காட்டூர் மாநில நெடுஞ்சாலையில், ரயில்வே கேட் அமைந்துள்ளது.
கடந்த 2019ல் ரயில்வே எல்லையில் பாலம் அமைக்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 67.95 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலத்திற்கு இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணி, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.
வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணிகள் முடிக்க வேண்டிய நிலையில், 50 சதவீதம் பணிகள் கூட முடியவில்லை. நேற்று சட்டசபை பொது கணக்கு குழு தலைவர், காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர், இணைப்பு சாலை பணிகளை பார்வையிட்டனர்.
பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனத்திடம், 'பணிகள் எப்போது முடிப்பீர்கள்' எனக் கேட்டதற்கு, 'ஆறு மாதங்களில் முடித்து விடுவோம்' எனக் கூறினர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, இணைப்பு சாலை பணிகளை துரிதமாக மேற்கொண்டு, நான்கு மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினர்.
'காலதாமதம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஒப்பந்த நிறுவனத்திடம் எச்சரித்தனர். மேலும், இணைப்பு சாலை அமையும் பகுதியில் கோவில் நிலங்கள் இருப்பதாகவும், அதனால் பணிகளில் தொய்வு ஏற்படுதாகவும் கூறப்பட்டது.
'மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, பொது கணக்கு குழுவினர் தெரிவித்தனர்.
மீஞ்சூர் - அரியன்வாயல் இடையே இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் முடங்கி கிடப்பதாகவும், அதை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து, 'ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர். திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.