/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் நடப்பாண்டு 2,000 ஏக்கர் அதிகம்
/
நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் நடப்பாண்டு 2,000 ஏக்கர் அதிகம்
நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் நடப்பாண்டு 2,000 ஏக்கர் அதிகம்
நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் நடப்பாண்டு 2,000 ஏக்கர் அதிகம்
ADDED : செப் 28, 2024 01:23 AM

பொன்னேரி,:பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கோளூர், திருப்பாலைவனம், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியுள்ளது.
இந்த கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வடகிழக்கு பருவமழை மற்றும் ஏரிகளில் தேங்கும் தண்ணீரை கொண்டு சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது.
நாற்றாங்கால் முறையில் நடவுப்பணிகளை மேற்கொள்வதற்கு தண்ணீர் தேவை இருப்பதால், அதை தவிர்த்து, நேரடி நெல் விதைப்பு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நேரடி நெல் விதைப்பு முறையை பின்பற்றும் கிராமங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு 11,500 ஏக்கர் பரப்பில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு 13,500 ஏக்கராக உயர்த்துள்ளது.
அக்டோபர் மாத இறுதி வரை நெல் விதைப்பு பணிகள் தொடரும் என்பதால், இது மேலும் அதிகரிக்கும் என, வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டு நாற்றாங்கால் முறையை பின்பற்றிய விவசாயிகளும், நடப்பாண்டு நேரடி நெல் விதைப்பிற்கு மாறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து நேரடி நெல் விதைப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் கூறியதாவது:
நேரடி நெல் விதைப்பால், மழைக்காலத்திற்குள் வேர்கள் உறுதியாக மாறிவிடும். கடும் மழையை தாங்கும். விளைநிலங்களில் தண்ணீர் தேங்கினாலும், பாதிப்புகள் அதிகம் இருக்காது.
குறைந்த தண்ணீர் செலவு, நாற்றாங்கால் மற்றும் நடவு செலவுகள் இல்லை, மருந்தினங்களும் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது.
விதைக்கும்போது சீரான இடைவெளி கிடைப்பதால், அதிக துார்களுடன் பயிர்கள் வளர்கிறது. இதனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.