/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க...ஆய்வு மட்டுமே போதுமா?:ஆண்டுதோறும் கடலுக்கு செல்லும் 16 டி.எம்.சி., மழைநீர்
/
ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க...ஆய்வு மட்டுமே போதுமா?:ஆண்டுதோறும் கடலுக்கு செல்லும் 16 டி.எம்.சி., மழைநீர்
ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க...ஆய்வு மட்டுமே போதுமா?:ஆண்டுதோறும் கடலுக்கு செல்லும் 16 டி.எம்.சி., மழைநீர்
ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க...ஆய்வு மட்டுமே போதுமா?:ஆண்டுதோறும் கடலுக்கு செல்லும் 16 டி.எம்.சி., மழைநீர்
ADDED : ஜூன் 08, 2025 02:35 AM

பொன்னேரி:ஆரணி ஆற்றின் குறுக்கே வைரவன்குப்பம், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழைநீரை சேமித்து வைப்பதற்காகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் புதிய தடுப்பணைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஆய்வு பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகளான நிலையில், தற்போது வரை அதற்கான பணிகள் நடக்காததால், ஆண்டுதோறும் 16 டி.எம்.சி., மழைநீர் கடலில் கலந்து வீணாவது தொடர்கிறது.
ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், நாராயணவனம் பகுதியில் உள்ள சதாசிவகொண்டா மலைப்பகுதியில் உருவாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, தத்தமஞ்சி என, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரி வழியாக வங்காள விரிகுடா கடலில் முடிவடைகிறது.
தமிழக பகுதியில் மட்டும், 65 கி.மீ., தொலைவு பயணிக்கும் ஆரணி ஆற்றில் ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் ஷட்டர்களுடன் கூடிய இரண்டு அணைக்கட்டுகள், சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், ரெட்டிப்பாளையம், ஆண்டார்மடம் என, ஏழு தடுப்பணைகளும் உள்ளன.
வலியுறுத்தல்
இந்த அணைக்கட்டுகள் மற்றும் தடுப்பணைகளில், மொத்தமாக 2 டி.எம்.சி.,க்கும் குறைவான மழைநீரே சேமித்து வைக்கப்படுகிறது. இது, அந்தந்த பகுதிகளின் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் அணைக்கட்டுகள் நிரம்பி, 16 டி.எம்.சி., உபரிநீர் பழவேற்காடு கடலில் கலக்கிறது. மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், 2 கி.மீ., தொலைவிற்கு ஒன்று என, கூடுதல் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர் கோரிக்கையின் பயனாக, மாம்பாக்கம் மற்றும் வைரவன்குப்பம் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதற்கான ஆய்வு பணிகள், கடந்த 2020ல் நடந்தன. திட்ட அறிக்கையும் தயாரித்து, அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பின், தடுப்பணைகள் அமைவதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் ஏதுமின்றி, திட்டம் கிடப்பில் போடப்பட்டுஉள்ளது.
இதனால், ஆற்றின் பல்வேறு பகுதிகள், கோடைக்கு முன்பே வறண்டு விடுகின்றன. அதேசமயம், அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் உள்ள பகுதிகளில், ஆண்டு முழுதும் 1 கி.மீ., தொலைவிற்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது.
இது விவசாயத்திற்கும், ஆற்றின் கரைகளில் பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவைக்காக போடப்படும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது.
சமூக ஆர்வலர்கள்
அதேபோல, ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் அமைப்பது பயனுள்ளதாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாம்பாக்கம், வைரவன்குப்பம் கிராமங்களில் தடுப்பணைகள் அமைய உள்ளதாக, பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்க அரசிடம் எந்த திட்டமிடலும் இல்லை.ஆரணி ஆற்றில் தடுப்பணைகள் அமைப்பதால், அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீரை பாதுகாக்கலாம். விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் செயலிழப்பு மற்றும் குடிநீரில் ஏற்படும் உவர்ப்பு தன்மையை தவிர்க்கலாம். தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சத்தியநாராயணன், விவசாயி, பொன்னேரி.
ஆரணி ஆற்றில் மாம்பாக்கம், வைரவன்குப்பம் ஆகிய கிராமங்களில் தடுப்பணைகள் அமைக்க திட்டமிட்டு, அதற்கான ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது, அதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. தடுப்பணைகளாக இல்லாமல், ஷட்டர்களுடன் கூடிய அணைக்கட்டாக அமைத்தால், அதிகளவில் மழைநீரை சேமித்து, அவசர காலங்களில் வெளியேற்ற முடியும். அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- நீர்வளத் துறை அதிகாரி,
பொன்னேரி.