ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்ட ஏரிகளை மீட்பதற்கு சரியான தருணம்!பாதையை துண்டித்து 'நோட்டீஸ்' வழங்க கலெக்டர் உத்தரவு
ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்ட ஏரிகளை மீட்பதற்கு சரியான தருணம்!பாதையை துண்டித்து 'நோட்டீஸ்' வழங்க கலெக்டர் உத்தரவு
UPDATED : செப் 26, 2026 09:32 PM
ADDED : செப் 26, 2026 08:53 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்துள்ள இந்த சமயத்தில், பாதையை துண்டித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ் வழங்குமாறு, கலெக்டர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீர்வளம், வருவாய் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும், குறுக்கிடுவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கவும், கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 586 ஏரிகள், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகள் என, மொத்தம் 1,167 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை நம்பி, 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏரிகளுக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து வீணாகி வருகின்றன. மேலும், நீர்வரத்து இல்லாத ஏரிகளை சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் ஒன்றியத்தில் பெரிய ஈக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம் ஆகிய ஏரிகளை சிலர் ஆக்கிரமித்து, நெல், வாழை பயிரிட்டு வருகின்றனர்.
அதேபோல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், எல்லாபுரம் உள்ளிட்ட தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளையும், சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, ஆரணி ஆற்றங்கரையோரம், ஊத்துக்கோட்டை துவங்கி பெரியபாளையம், பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகளில், ஆக்கிரமிப்பு விவசாயம் அமோகமாக நடந்து வருகிறது.
ஏரி நிரம்பினால் உபரிநீர் வெளியேறும் கலங்கல் அருகிலும், நெல் பயிரிட்டு உள்ளனர். ஏரிக்குள் தண்ணீர் தேங்கினால், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, நீர்வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
ஏரிக்குள் நடைபெறும் விவசாய பணிகளுக்கு, உரம், பூச்சி மருந்து கொண்டு செல்லவும், அறுவடை செய்யப்படும் பயிர்களை கொண்டு வரவும், கரையை உடைத்து பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதை தடுக்க வேண்டிய நீர்வளத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியமாக உள்ளனர்.
நீர்நிலை மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீர்வளம் மற்றும் வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தனரே தவிர, முழுவதுமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் கவிதா தலைமையில், நேற்று முன்தினம் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், பெரும்பாலானவற்றில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக, ஏரிக்கரையை உடைத்தும், மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை வெளியேற்றியும் வருகின்றனர்.
பொன்னேரி வட்டத்தில் மேலக்கரமனுார், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளிலும், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளிலும், ஆக்கிரமிப்பு செய்து, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து, விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது, அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏரிகளில், அடுத்த பருவத்திற்கு நெல் பயிரிடுவதற்காக, நாற்று நடும் பணியை துவங்கியுள்ளனர். அவைகள் வளர்ந்து விட்டால், மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், நீர்வளம் மற்றும் வருவாய் துறையினர் உடனே ஏரிகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், உடைக்கப்பட்ட ஏரிக்கரைகளையும் சீரமைத்து, துார்வார வேண்டும்.
இன்னும் சில நாட்களில், பருவமழை காலம் துவங்க உள்ள நிலையில், ஏரிகளில் நிலவும் ஆக்கிரமிப்பால், மழைநீர் தேங்காமல் வீணாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீர்நிலைகளில் ஆய்வு செய்து, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதில் அளித்து, கலெக்டர் கவிதா கூறியதாவது:
ஏரிகளில் ஆக்கிரமிப்பு குறித்து, அந்தந்த பகுதி விவசாயிகள் புகார் அளிக்கின்றனர். அதை, நீர்வளத் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் நேரடியாகச் சென்று, ஆக்கிரமிப்பாளர்களிடம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி 'நோட்டீஸ்' வழங்க வேண்டும்.
தற்போது, அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், ஆக்கிரமிப்பு ஏரிகளுக்கு செல்லும் பாதையை துண்டித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்க வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் அளித்த பின், ஆக்கிரமிப்பு நிலத்தை, கிராம நிர்வாக அலுவலகர் கண்காணிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பட்ட ஏரிகளில் பயிரிட முயன்றால், உடனே நீர்வளத் துறை மற்றும் தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பின், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஆக்கிரமிப்பு ஏரிகளில் மீண்டும் மீண்டும் பயிர் சாகுபடி செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
